நீல நிறமும் ரோஜா நிறமும் – யார் தொடங்கியது?

எம் வாழ்வில் நாம் பல விடயங்களை யோசிக்காமல், கேள்விகள் எதுவும் கேட்காமல் செய்து உள்ளோம். அவற்றுள் ஒன்று, இந்த நீல-ரோஜா ஆதிக்கம். நீங்கள் கவனித்தது உண்டோ தெரியாது, நாம் பாவிக்கும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும் சில சமயங்களில் ஒன்று நீல நிறமாகவோ அல்லது ரோஜா நிறமாகவோ இருப்பது உண்டு. நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை, இதில் நீல நிறம் ஆண்களுக்கு உரிய நிறமும், ரோஜா நிறம் பெண்களுக்கு உரிய நிறம் எனவும் உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த நிறங்களில் தான் நாம் பொருட்கள் வாங்க வேண்டும் என்று நாம் எங்கு கற்றுக் கொண்டோம்? எங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? இந்த சம்பிரதாயத்தை, பழக்கைத்தை யார் தொடங்கியது?

இந்த கேள்வியை யாரிடமாவது கேட்டால் அவர்கள் கூறும் ஒரு பதில் – “இது அந்த காலத்தில் இருந்தே அப்படி தான் இருந்து வருகிறது.” அந்த காலம் என்றால் எந்த காலம்? எம் பெற்றோர்களோ? அவர்களின் பெற்றோர்களோ? அல்லது அவர்களின் பெற்றோர்களை? அல்லது ஆதாம் ஏவாள் காலத்திலேயே தொடங்கியதா? இதை யாரவது தொடக்கி விட்டு தானே இருக்க வேண்டும்? எம் வாழ்க்கையை பெரிதாக ஆதிக்கம் செய்யும் இந்த இறந்து நிறங்களை பற்றி, இவை எங்கு இருந்து வந்தன, என்பதை பற்றி நாம் ஏன் இன்னும் சிந்தித்து பார்ப்பது இல்லை?

இந்த நீல-ரோஜா பழக்கம் முதன் முதலில் தொடங்கியது முதலாம் உலக யுத்த காலத்தில். இருப்பினும் இங்கு வேடிக்கையான விடயம் யாதெனில், அந்த காலத்தில் ஆண்கள் ரோஜா நிறத்தையும் பெண்கள் நீல நிறத்தையும் தான் விரும்பினார்கள். இன்று ஏன் பெண்கள் ரோஜா நிறத்தை விரும்புகின்றனர் என கேட்டால் “அது ஒரு மென்மையான நிறம். கண்ணுக்கு அழகா இருக்கும்.” என சிலர் கூறுவார். அதே போன்று தான், அந்த காலத்தில் நீல நிறமானது “வானத்தின் நிறம். கண்ணுக்கு அழகானது. கண்ணுக்கு சுகமானது” என அவர்கள் நினைத்தனர். அதே போன்று, இன்று நீல நிறத்தை விரும்பும் ஆண்கள் அந்த காலத்தில் சிவப்பு நிறத்தை போன்ற குருதியை போன்ற, உழைப்பை போன்ற ரோஜா நிறத்தை விரும்பினார்.

இருப்பினும் இரண்டாம் உலக யுத்த காலத்தின் பொழுது இந்த நிலமை  மாறியது. பெண்கள் தம் உரிமைகளுக்காக குரல் கொடுக்க தொடங்கினர். பல பெண்கள் வாக்களிக்க அல்லது வேலைக்கு செல்ல, ஆண்களை போல மாறுவேடம் போட தொடங்கினர். பெண்கள் தங்களை போல ரோஜா நிறம் அணிய தொடங்கியதும், ஆண்கள் “ஐயோ, இது சரிவராது” என நீல நிறத்தை அணிய தொடங்கினர். இந்த மாற்றத்தை தமக்கு சாதகமாக பாவிக்க எண்ணியது நம் வியாபாரிகள், முக்கியமாக சந்தைப்படுத்தல் துறையில் உள்ள மார்க்கடிங் ஆசான்கள் தான். இவர்கள் பெண்களுக்கு ரோஜா நிற பொருட்களையும் ஆண்களுக்கு நீல நிற பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கினர். இன்று அவர்கள் தொடங்கிய இந்த விளையாட்டை நாம் இன்றும் தொடர்ந்து விளையாடிக் கொண்டு உள்ளோம்.

யார் என்ன நிறம் உடுத்தினால் என்ன? இதில் என்ன பிரச்சனை உள்ளது என நீங்கள் எண்ணலாம். ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள். இன்றைய சமூகத்தில், ஒரு ஆண் ஒரு ரோஜா நிற சட்டை போட்டால், அவன் எத்தனை கேலிகளுக்கும் பகிடிகளுக்கும் உள்ளாகிறான்? அவனை எத்தனை பேர் சொல்லி அழைக்கின்றோம்? இந்த நீல-ரோஜா பழக்கம், ஒரு நபரை தமக்கு விரும்பிய சட்டையை கூட அணிய முடியாமல் தடுக்கிறது.

பெண்களுக்கு ரோஜா நிறம் தாம் பொருத்தமானது, ஆண்களுக்கு நீல நிறம் தான் பொருத்தமானது என கூறுவதன் மூலம் நாம் தேவையற்ற பால்நிலை விதிமுறைகளை உருவாக்கிறோம். அவர்களை ஒரு சிறைக்குள் போட்டு அடைகின்றோம். அவர்கள் இறுதிவரை இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கின்றோம்.  எனவே, ஒரு கைக்குழந்தைக்கு பரிசு வாங்க முன் அது நீல நிறமா அல்லது ரோஜா நிறமா என யோசிக்காமல், இதனை எந்த பிள்ளை விரும்புமா? இது பயனுள்ள ஒரு பரிசா என யோசிப்போம். ஒரு நபர் ஆணோ பெண்ணோ, அவருக்கு பிடித்த நிறத்தில் பிடித்த பொருளை பாவிக்க கூடிய ஒரு சூழலை எதிர்காலத்திலாவது உருவாக்க முயற்சிப்போம்.

v அருந்ததி வல்லவராயன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர் கட்டுரைகள் எழுதுவில் மற்றும் சமூக சேவையில் ஆவல் கொண்ட ஒரு இளம் யுவதி. இவர் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலை வன்முறை ஒழிப்பு பற்றி பாலியல் நாட்டம் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது.

Social Share: