போரின் வடுக்களுடன் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

பெண்கள் தாம் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்களால் வாழ்வாதாரத்திற்கு வழி இன்றி நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். போருக்கு பின்னரான ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டில் தமிழ்பேசும் மக்கள் சவால்களையும் புறக்கணிப்புக்களையும் எதிர்கொள்கின்றனர். எங்கு யாருக்கு எதிராக அநீதிகள் இடம்பெற்றாலும் அவை பேசப்படவேண்டும். நாளாந்தம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். இலங்கையில் 1.3 மில்லியன் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவேண்டும். இவர்களுக்கான சமூக வலுவூட்டல் என்பது மிக அவசியமான ஒன்று.

தெற்காசிய நாடுகள் ஆண்களை மையமாகக் கொண்ட குடும்ப அலகைக் கொண்டவையாக இருக்கின்றன. இலங்கையும் ஆண்தலைமை தாங்கும் குடும்பப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடு. இலங்கையில்  மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அந்தப் பெண்கள் பல்வேறு காரணங்களால் இரட்டைச் சுமையைச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படன. இதனால் இப் பிரதேசங்களில் குடும்ப அலகு சிதைவடைந்துள்ளது.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடமாகணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்துள்ளன. பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் என்பதற்குள் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், தடுப்புக்காவலில் உள்ளவர்களின் குடும்பங்கள், விவாகரத்தானவர்கள், தனித்த பெண்கள், போராளிகளாக இருந்த பெண்கள், கணவன் ஊனமுற்றிருத்தல் எனப் பலவகையினரைக் குறிப்பிட முடியும். இதில் யுத்தம் அன்பான பல குடும்பங்களைச் சிதறடித்திருக்கின்றது. வடமாகாணத்தில் 54,532 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன என யாழ் மகளிர் அபிவிருத்தி நிலைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வடக்கு, கிழக்கில் 89,000 விதவைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உளவியல், சமூக, பொருளாதார ரீதியில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்த நிலையில் கூட இவர்களுக்குச் சமூகக் கட்டுமான வசதிகளோ இவர்களுக்கான பாதுகாப்போ வழங்கப்படவில்லை. எமது அரசாங்கத்திடம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான பொருத்தமான திட்டம் ஒன்றில்லை மற்றும் இருக்கின்ற திட்டங்கள் கூட சரியான முறையில் நெறிப்படுத்தப்படுவதில்லை. காலங்காலமாகப் பெண்களுக்கெதிரான உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன.

ஒரு குடும்பம் பற்றிப் பேசும் போதோ அல்லது ஒரு நாட்டைப் பற்றிப் பேசும் போதோ பெண் தான் ஆதாரமாக இருக்கிறாள். ஆனால் போருக்குப் பின்னதான சூழ்நிலைகளால் பல பண்பாட்டு முரண்பாடுகள், வறுமை, வன்முறைகள், ஏற்றத்தாழ்வுகள் போன்றன குடும்பத்துக்குள் சிக்கல்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாகத் தமிழ்ப்பெண்கள் ஒரு கட்டமைப்புக்குள் வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் மூன்று தசாப்தகாலத்துக்கு மேற்பட்ட யுத்தத்தின் வலிகளைச் சுமந்துகொண்டு அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். ஒரு இனத்தின் தனித்துவம் படிப்படியாக சிதைவடைந்து வருகிறது.

தனியொருத்தியாக பிள்ளைகளின்ர நன்மை, தீமைகளில் பங்கெடுக்கோணும். சமூகத்தில நாங்கள் பல விடயங்களில விதவை எண்டதால எவ்வளவோ விடயங்களில் பின்னுக்கு நிக்கிறம். சமுதாயத்தில நாங்கள் ஒதுக்கப்படுறம். நாங்கள் உத்தமியா இருந்தாலும் சமுதாயம் எங்களத் தூற்றுது. இரவில எங்கயும் போயிற்று வந்தா தப்பு. நாங்கள் கணவன இழந்ததால நிறைய கஷ்டப்படுறம். பிள்ளையளப் படிக்க வைக்க முடியாத நிலையில் இருக்கிறம். கூலிவேலை செய்து தான் பிள்ளையளப் படிப்பிக்கிறம். நாங்கள் வேலைக்குப்போறதால வீட்டில பிள்ளைகளக் கவனிக்க முடியிறேல்ல. பிள்ளைகளின்ர படிப்புப் பாதிக்கப்படுது. அதால பிள்ளைகள்ட எதிர்காலமும் பாதிக்கப்படலாம். தேவையில்லாத பேர்கள் வரும். இளம் விதவைகள் எண்டால் அவள் வெளியில போய் வேலை செய்யிறதெண்டா சரியான கஸ்டம்.” – இது கணவனை யூத்தத்தில் பறிகொடுத்த ஒரு பெண்ணின் கருத்து.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “நாங்கள் இப்ப இருக்கிறதுக்கே வீடில்லாமல் இருக்கிறம். தொழில் வாய்ப்பில்லாமல் இருக்கிறம். கணவனையும் இழந்து ஒண்டுமே எங்களுக்கில்ல. இந்த இழப்பீடுகளச் செய்யுங்கோ எண்டு குடுக்காத கடிதமும் இல்ல நிறுவனங்களும் இல்ல. ஆனால் எந்த வித முடிவும் எங்களுக்கில்ல. இன்னுமே ஒரு வாழ்வாதாரமா நிவாரணமோ எதையுமே நான் பெறேல்ல. சமூகத்தில பெண்கள் தனிய வாழுறது என்பது கஷ்ரமான விடயம். வியாபாரம் செய்யும் போது கூட ஆண்களுடன் கதைத்தால் சமூகம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. போன் கதைப்பது தொடர்பாகக்கூட விமர்சிக்கப்படுகிறம். ஆனால் எங்கட தேவைய நாங்கள் தான் பாக்கோணும்” என்கிறார்.

வடபகுதியில் தமிழர்களின் சமய கலாசாரக் கட்டமைப்பும், பாதிக்கப்பட்ட இப் பெண்களை நசுக்குவதாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் அதிகரிப்பு பாரிய பண்பாட்டு மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நவீனம் வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் கூட மறுமணம் அல்லது மறுவாழ்வு பற்றிய விடயங்கள் பெயரளவிலேயே இருப்பதாகத் தெரிகின்றது.

சுனாமியில இழந்து, போரால சொத்துக்களையும் கணவனையும் இழந்து, ஊனமுற்று இன்று தனிமையில தள்ளப்பட்டிருக்கிறம். இப்ப எனக்கு வீட்டுத் திட்டம் இல்ல. புருஷன் இல்லாததால தனியாள் எண்டு என்ன ஒதுக்கிற்றினம். என்ர பிள்ளைகளும் கணவனும் இருந்தா வடிவா உழைச்சு என்னப் பாப்பினம். நாங்கள் மனதில எவ்வளவோ வேதனைகளோட இருக்கிறம். எங்கட கிராமசேவையாளரிட்ட எனக்கு ஒரு வீடு தேவை எண்டு கேட்டதுக்கு ஒராள் தானே மரநிழலிலும் இருக்கலாம் தானே” என்றார் என வருந்துகிறார் போரினால் தனது மொத்த குடும்பத்தையும் தொலைத்துவிட்டு நிற்கும் கிளநொச்சியைச் சேர்ந்த உமா. தனி ஒருவர் என்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவிகளின் போது புறக்கணிக்கப்படும் பல பெண்கள் வடக்கில் இருக்கிறார்கள்.

எங்களுக்கு உதவி வேண்டாம். முதலில காணாமல் போன பிள்ளைகளத் திருப்பித் தாங்கோ. காணாமல் போன பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ் எடுக்கச் சொல்லினம். அதுக்கு எங்களுக்கு விருப்பம் இல்ல. எங்களுக்குப் பிள்ள தான் வேணும். இராணுவ கட்டுப்பாட்டுக்க வந்த பிள்ள எங்க? காசு, பணம் ஒண்டுமே வேண்டாம்” என்கிறார் இந்திரா. இப்படிக் காணாமல் போன உறவுகளைத்தேடி பல பெண்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

சில பெண்கள் தமது காணாமல் போன உறவுகளைத் தேடுவதிலேயே தமது காலத்தை செலவிடுவதுடன் சொத்துக்களையும் இழந்துள்ளார்கள். இவர்கள் போரின் வலிகளையும் வடுக்களையும் நாளாந்தம் சுமந்த வண்ணம், உளவியல் ரீதியான பாதிப்புக்களுடனும் மன அழுத்தங்களுடனும் வாழ்கிறார்கள்.

பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட பல குடும்பங்கள் நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காகப் போராடுகிறார்கள். பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அரசும் தனியார் நிறுவனங்களும் செய்கின்ற உதவிகள் பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்றடையவில்லை. அத்துடன் கிடைக்கின்றவர்களுக்கும் முழுமையாக உதவிகள் கிடைத்ததா என்பது கேள்விக்குறியே. இன்று இவ்வாறான குடும்பங்கள் பல தங்கி வாழும் நிலையிலேயே இருக்கின்றன.

இவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றக்கூடிய தொழில், இருப்பிடம் போன்ற எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. சுய தொழில், வியாபாரம் போன்றவற்றை அரசும் நிறுவனங்களும் ஊக்குவித்தல் அவசியம். இவர்களுக்கு நீண்டகால பொருளீட்டலுக்குப் பொருத்தமான வாழ்வாதார வாய்ப்புக்களே பொருத்தமானது. “பசி என்று சொல்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது”. பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள் உளவியல், சமூக, பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தப்படவேண்டும். இன்றைய நிலைதொடருமாயின் எம் இனத்தின் இருப்பும் தனித்துவமும் கேள்விக் குறியாகும்.

anu அனுதர்ஷி லிங்கநாதன், யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவர் 2014ஆம் ஆண்டில் இருந்து எழுத்தாளராகவும் பணிபுரிகிறார். இவர் பால்நிலை கல்வி மற்றும் பத்திரிகைத்துறை போன்றவற்றை பற்றி கற்பிப்பதில் விசேட ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது.

Social Share: