சமுதாயமும் பெண்ணியமும்

இன்றைய சமுதாயத்தில், ஜனநாயக ஆட்சிமுறையின் விளைவாக சம உரிமைக்காக போராடும் பெண்களிடையே நாள் தோறும் ஒலிக்கும் சொல் : பெண்ணியம். ஆனால் ,பெண்ணியம் என்ற சொல்லை கேட்ட உடனேயே துள்ளிக் குதிக்கும் மனிதர்கள் ஒருபக்கம், அடித்துபிடித்து ஓடும் மனிதர்கள் மறுபக்கம். சம உரிமைக்காக வாதாடும் போராளிகளெல்லாம் பெரும்பான்மையாக கிராமப்புற சம்பவங்களையோ, அல்லது கற்பழிப்பு போன்ற உச்சக்கட்ட விளைவுகளை விளக்குவதாலோ என்னவோ நகரங்களிலும்,படிப்பறிவும் முன்னேற்றமும் அடைந்த பகுதிகளில் வாழ்பவர்களுக்கு “சம உரிமை” ஏற்கனவே அடைந்த குறிக்கோளாகவும், அதற்கான பிரச்சாரம் அவசியமற்றதாகவும் தோணுகின்றது.

உடலளவிலான தாக்கங்களையும் தாண்டி, ஒரு மங்கையை அதிகம் பாதிப்பது மனதளவிலான தாக்கங்கள் தான். எம்மை அறியாமலேயே  வாயிலிருந்து எச்சரிக்கை  என்ற பேரில் நழுவி வரும் அச்சுறுத்தல்களை மறந்துவிடக்கூடாது.

வாழ்க்கை முழுவதும் செக்ஸிஸ்ட் (sexist) சொல்லாட்சியை கேட்டு வளர்ந்து விட்டதால் இது சாதாரணமாகிவிட்டது. எமது நாளாந்த வாழ்க்கையில் விதியில் நடந்து செல்கையில் கேட்கும் கேட்க்கல்லிங்கும் (catcalling) விசில்களும் பொருட்படுத்தாமல் செல்கின்றோம். என்னவாக இருந்தாலும் அது எமது அழகைப் பாராட்டுவது தானே! அதைப் பெரிதுபடுத்தினால் எமது செயல்களை கண்டிக்கும் சமூகத்தில் வாழும் எமக்கு வேறு ஒரு வழியும் இல்லை. அதன் பின் எமது வாழ்க்கை முழுவதும் “பெண்கள் உணர்ச்சி பூர்வமானவர்கள் என்பதால் அவர்களிற்கு தலைமைத்துவப் பதவிகள் வழங்கப்படக் கூடாது”  போன்ற எமது திறன்களை அவமானப்படுத்தும் சொற்களைக் கேட்கின்றோம். வேடிக்கை என்னவென்றால், எமது முந்திய கட்டுரைக்கு, பாலியல் வல்லுறவு கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளால் ஏற்படுவதா என் வினாவிய போது பெரும்பாலான ஆண்கள் “ஆம்” எனக்கூறிய அதேவேளை, பெண்களிட்கே தமது தடுமாறும் உணர்ச்சிகள் காரணமாக தலைமைத்துவ பதவிகள் தகுந்ததல்ல எனச் சமுதாயம் விநோதமாகக் கூறுகின்றது.

சில வருடங்களுக்கு முன்பு எமது நண்பர் ஒருவருடன் தொழில் செய்யும் பெண்கள் பற்றி நடைபெற்ற வாதம் நினைவுக்கு வந்தது. பணியிடங்களில் ஆண்களை விட பெண்கள் போட்டித்தன்மை கூடியவர்களாக காணப்படுகிறார்கள் எனக் கூறிய இந்நபர் பெண்கள் தமது சக வேலையாட்களிக்கு உதவுவதும் குறைவு எனத் தெரிவித்தார். இத்தகைய எண்ணம் கொண்டவர்களுக்கு பணியிடத்தில் பெண்கள் அனுபவிப்பதை நாம் விளக்குகின்றோம். தமது பணியிடத்தில் தாம் மீண்டும் மீண்டும் பாலியல் துன்புறுத்தலிற்குஉட்படுத்தப்பட்டதாக பெண் வானியல் விஞ்ஞானிகள் சிலர் CNNஇல் அண்மையில் தெரிவித்தனர். இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட செயல் அல்ல. தமது வாழ்க்கையில் பெண்கள் சாதாரணமாக முகம்கொடுக்கும் பிரச்சனையே இது.

Payscaleஆல் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஒரே அளவு கல்வியும்அனுபவமும் கொண்ட தொழிலாளர்களிடையே பெண்கள் 98சதங்கள் ஆண்களின் ஒவ்வொரு 1டாலரிட்கும் (dollar) சம்பாத்திக்கின்றனர். அனைத்திலும் ஓப்பாக இருந்தும் பெண்களிற்கு வழங்கப்படும் சம்பளமோ குறைவு! இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவலாகும், சான்றட்டகருத்தல்ல. தினம்தோறும் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்த பின்னும், அதே அளவு சம்பளம் வழங்கப்படாத போதும் அதைக் கண்டுகொள்ளாது, எமது போட்டித்தன்மையை கண்டிக்கும் சமூகமே இது!

சிறுமியாக இருந்த போது உரத்தப்பேசச் சொன்னார்கள், ஆனால் இப்போதோ சத்தமாகப்பேசக் கூடாது என்கிறார்கள். குறிப்பாகக் கூறப்போனால் “பெண்ணென்பதால் சத்தமாகப் பேசக்கூடாது” ஒன்றிக்கு பல முறை எமது ஆண் சகவாசிகளிடம் இருந்து கேட்டு உள்ளோம். கடந்த சில வருடங்களாக நாம் பெண்ணியவாதியாக(Feminist) ஆக வெளிப்படையாக தெரிவித்த காலத்திலிருந்து எம்மை பல பெயர்களால் சமுதாயம் அடையாளப்படுத்தியுள்ளது.  அப்பெயர்களில் ஒன்று Feminazi ஆகும். தற்போதைய உலகில் பெண்களின் சம உரிமைகள் கொடுக்க வேண்டுவது போலாந்து மீது படையெடுத்து இனப்படுகொலை ஒன்றை தூண்டுவதற்கு சமமாகி விட்டது. பெண்ணிய கோட்பாடுகளின் மீது எமக்கு இருந்த நம்பிக்கையை பலர் கேள்வி கேட்டதுண்டு. ஒருவர், தனது சமூகத்தில் பெண்கள் ஒருவித பாகுபாடையும்அனுபவிக்காததால், பெண்ணியம் தற்காலத்தில் தேவையில்லை எனத் தெரிவித்தார். ஒருவர் இன்று உணவு உண்டதால் உலகப் பட்டினி இல்லை என வாதிட முடியாது. பெண்களாகப் பிறந்ததால் நாங்கள் அனுபவித்துள்ள பாகுபாடைஇக்கட்டுரையில் விபரித்துள்ளோம். எம்மில் பலரிற்கு சாதாரண மனித உரிமைகள் இல்லாத போது எப்படி எம்மால் ஒரு சமூகமாக வெற்றி பெற முடியும்?

ஆகவே இவ்வகையான எண்ணங்கள் எமது சமூகத்தில் பரவியிருப்பதற்கான காரணம் என்ன என நாம் எண்ணினோம். பதில் இதுவாக இருக்கலாம். வாழ்க்கையில் பல நடவடிக்கைகள் சமூகத்தின் செல்வாக்கால் நடைபெறுபவை. இதில்    திரைப்படங்கள் பெரும்பங்காற்றுகின்றன. அப்படியிருந்தும், ஒரு பெண் கதாநாயகி கொண்ட, அல்லது கதாநாயகனின் காதலியாக மட்டும் சித்தரிக்கப்படாது பெண்கள் நடித்த Commercial திரைப்படங்கள் தான் எத்தனை? “இல்லை” எனக் கூறும் பெண்களின் அடிப்படை உரிமையை குற்றமாகச் சித்தரிக்கும் படங்களும், பெண்களை பின்தொடர்தலை (Stalking) நியாயப்படுத்தும் காட்சிகளும் எமது சமுதாயத்தின் நடத்தைகளை நியாயப்படுத்துகின்றன.

இவ்வாறான செக்ஸிஸ்ட்(sexist) சொல்லாட்சியை தினம் தினம்ம முகம் கொடுக்கின்ற வேளையில், எம்மை ஆதரித்துப் பேச வேண்டியவர்கள் பெண் என்பதால் எங்கள் திறன்களில் சந்தேகம் கொள்வது எமது தன்னம்பிக்கையை அழிக்க முடியும். “அத்தொழில் பெண்களிற்கு கடினமானது”  மற்றும் “நீ குற்றவியல் வழக்கறிஞர் ஆகாதே! அது பெண்களிற்கு தகுந்த தொழில் அல்ல” போன்ற வாக்கியங்களை எமது ஆசிரியர் கூறும் போது எமது வாழ்க்கை இலட்சியங்கள் கேள்விக்குரியாகிவிடுகின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் ஓர் ஆசிரியர் என்னிடம் “நீ வைத்தியராகி விடாதே! அது உமது திருமண வாழ்க்கையை சிக்கலாக்கி விடும்” எனக் கூறினார்! கட்டிளமைப்பருவத்தில் இருந்த என்னிடம் அவ்வயதிலிருந்தே திருமணம் தான் முக்கியம் என்ற எண்ணத்தையும், எனது அனைத்து வாழ்க்கை முடிவுகளையும் அதைக் கருத்தில் கொண்டு தான் எடுக்க வேண்டும் என்பதையுமே இச்சமூகமானது கூறுகின்றது. எமது ஆசிரியர்கள் வழங்கும் விலைமதிப்பற்ற அறிவுரைகளை நாம் மதித்தாலும் சில சந்தர்ப்பங்களில் அதில் மறைமுகமாக செக்ஸிஸ்ட்(sexist) சொல்லாட்சி கலந்திருப்பது சரியா?

குடும்பம் என்ற அத்திவாரமும் பெண்களை சில நேரம் ஆட்டிப் படைக்கின்றது. பிள்ளையை பெற்றேடுக்கும் தாய்மார் சிலருக்கு பத்து மாத சுமையை விட, குழந்தை பெண்ணாக இருந்துவிட்டால் வீட்டிலுள்ளோர் கவலைப்படுவார்களோ என்ற சுமை தான் அதிகம். சமூக அந்தஸ்திற்காக மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்தாலும் “பெண் குழந்தை தான்” என கவலைப்படும் போது கிழிகிறது அம்முகமூடி.

பெண்கள்  வளரும்  பொழுது அவர்களுக்கென உருவாக்கப்படும் விதிகள் அவளை பாதுகாக்கிறதா கட்டுப்படுத்துகிறதா என்பது அடுத்த கேள்வி. தமயன் இரவு 12 மணிக்கு வந்தாலும், 9 மணிக்குள்  பெண்கள் எல்லோரும் வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும், சொந்த பந்தத்திற்கு முன் அடக்கமின்றி உட்காரவோ சிரிக்கவோ கூடாதென எம்மில் பலருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மக்களின் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், “சமூகம் என்ன சொல்லும்” என்ற பீதியிலிருந்து பலராலும் இன்னும் வெளிவர முடியவில்லை. திருமண வயதை நெருங்கும் பெண்களுக்கோ பிரச்சனைகள் இன்னும் அதிகம். விற்பனைக்கு வைக்கப்படும் பொம்மையாக மாறிவிடுகிறார்கள், அவள்  பேருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டால், யார் அவளை மணந்துக்கொள்வது? என்ற சிந்தனையில், தரப்பட்ட சுதந்திரமும் பறிக்கப்பட்டு விடுகிறது.

ஜனவரி மாதமானது சம உரிமைக்காக போராடும் பலரிற்கு ஒரு பரபரப்பான மாதமாக அமைந்தது. ஒரு வெளிப்படையான செக்ஸிஸ்ட் மனிதன் ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற அதே வேலை உலகளாவிய ரீதியாக பெண்களின் சம உரிமை மற்றும் பல கோரிக்கைகளிற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்தனர். அமெரிக்கா வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய ஒரு நாள் போராட்டமாக பெயர் பெற்ற இவ்அணிவகுப்பில் கலந்து கொண்டு  பெண்களின் சம உரிமைக்காக போராடிய ஆண்களிற்கும், பெண்களிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள். ஈராக் போன்ற நாடுகளில் கூட இவ் அணிவகுப்பில் மக்கள் பங்குபற்றிய  அதேவேளை, பாலியல் வல்லுறவும், துன்புறுத்தலும் பரவலாகக் காணப்படும் இலங்கையில் இது நடைபெறவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பெண்ணியம் தமக்கு தேவையில்லை எனத் தெரிவிக்கும் பெண்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கின்றோம். இன்று உங்களிற்கு வெளிப்டையாகப் பேசவும், தொழில் செய்யவும், கல்வி கற்கவும், வாக்களிக்கவும், இரண்டாம் தர குடிமக்களாக உங்களை கருதாது இருக்கவும் போராடிய பெண்ணியவாதிகளிற்கு நன்றி தெரிவியுங்கள். அவர்களின் போராட்டமே உங்களது சுதந்திரத்திற்கான காரணம்.

பெண்களை திடமாக்குவதல்ல பெண்ணியவாதம். பெண்களின் திட உறுதியையும், பலத்தையும், திறன்களையும்உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதே பெண்ணியம். பெண்கள்  அறிவுசார், சமூக , பொருளாதார ரீதியாக ஆண்களிற்கு இணையானவர்கள்  என்ற எண்ணமே பெண்ணியம். அனைவரும் ஒரு வலிமையான பெண்ணை விரும்புகின்றனர் – அவள் எழுந்து நின்று உரத்தப் பேசும் வரை. திடீரென அவள் எல்லையை மீறி விட்டாள். உலகம் ஒரு உறுதியான பெண்ணை கற்பனையில் மாத்திரம் விரும்புகின்றது. ஒரு உண்மையான சுவாசிக்கும் மனிதனாக அல்ல!

Social Share: