வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறாவளிப் பேரிடர்களில் பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதார உரிமைகள், பாதுகாப்பு மற்றும் தேவைகளை உறுதிப்படுத்துதல்.
வெள்ளம், மண்சரிவு, சூறாவளி ஆகியவை வீடுகளையும் விவசாய நிலங்களையும் அழிக்கின்றன; உயிர்களையும் உடமைகளையும் பறிக்கின்றன. பயிர்கள் அழிகின்றன; கால்நடைகள் இறக்கின்றன; மீன்பிடி உபகரணங்களும் சிறு வியாபாரங்களும் சேதமடைகின்றன. இதனால் மக்களின் வருமானம், உணவுப் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் பொருளாதார நிலை பாதிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய வாழ்க்கையை மீண்டும் உருவாக்குவதற்கு குடும்பங்கள் மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் போராட வேண்டியிருக்கிறது.
ஆனால் பேரிடரின் தாக்கம் வீடு, சொத்து, தொழில் இழப்புகளுடன் முடிவதில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல்நலம், பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பாலியல், இனப்பெருக்கச் சுகாதாரத் தேவைகளும் பாதிக்கப்படுகின்றன.
பேரிடர் ஏற்படும்போது உணவு, குடிநீர், உடை மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் வழங்குவது அவசியம். அதேவேளை, கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கிறதா? மாதவிடாய்ப் பொருட்கள் உள்ளனவா? பாதுகாப்பான கழிப்பறைகளும் குளிப்பதற்கான வசதிகளும் இருக்கின்றனவா? கருத்தடைச் சேவைகளைப் பெற முடியுமா? பிரசவித்த தாய்மார்களுக்கும் முதல் மாதவிடாயை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கும் தேவையான ஆதரவு கிடைக்கிறதா? என்பனவும் முக்கியமான கேள்விகள்.
இவை கூடுதல் வசதிகள் அல்ல. உடல்நலம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகளுடன் தொடர்புடைய அடிப்படைத் தேவைகள்.
2025 நவம்பர் மாத இறுதியில் இலங்கையைப் பாதித்த டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் இடம்பெயர்வு, பேரிடர் நிவாரணத்தில் இத்தகைய தேவைகளைப் புறக்கணிக்க முடியாது என்பதை மீண்டும் உணர்த்தின. ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) அறிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதன் அவசியத்தையும், தற்காலிக முகாம்களில் தனியுரிமை மற்றும் சுகாதார வசதிகளை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டின.
காலநிலை நீதி (Climate Justice) என்பது மக்களைப் பேரிடரிலிருந்து மீட்பது மட்டுமல்ல. பேரிடரின்போதும் அவர்களின் உரிமைகளையும் உடல்நலத்தையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதுமாகும்.
பேரிடர் அனைவரையும் ஒரே மாதிரியாகப் பாதிப்பதில்லை
பேரிடரின் தாக்கம் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வருமானம், தொழில், வயது, பால்நிலை, உடல்நிலை, மாற்றுத்திறன் (Disability), குடும்பப் பொறுப்புகள், வாழும் பிரதேசம் மற்றும் சமூக வர்க்கம் ஆகியவை ஒருவர் பேரிடரை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைத் தீர்மானிக்கின்றன.
விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்கள் பயிர்களை இழக்கும்போது உணவு உற்பத்தியும் வருமானமும் பாதிக்கப்படுகின்றன. கால்நடைகளை இழப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இழக்கலாம். சிறு வியாபாரம் செய்யும் பெண்கள் கடைகளையும் பொருட்களையும் இழந்தால், மீண்டும் தொழிலைத் தொடங்குவதற்குத் தேவையான முதலீட்டையும் வாடிக்கையாளர்களையும் திரட்டுவது கடினமாகிறது.
இவ்வாறான பொருளாதார இழப்புகளுக்கு மத்தியில் பெண்களின் பராமரிப்புப் பொறுப்புகள் தொடர்ந்து நீடிக்கின்றன. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக் குடும்ப உறுப்பினர்களைக் கவனிப்பதுடன், உணவு, தண்ணீர், உடை மற்றும் சுகாதாரத் தேவைகளையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. வீடு சேதமடைந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் இடம்பெயர்ந்தாலும், இந்தப் பொறுப்புகள் மறைவதில்லை. மாறாக, அவை அதிகரிக்கின்றன.
பேரிடருக்குப் பின்னர் வேலைக்குத் திரும்பும் பெண்கள், தங்களுடைய இழப்புகளைச் சமாளிப்பதற்கு முன்பே மீண்டும் குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். சில பெண்கள் பயிர்ச்செய்கைக்காகக் கடன் பெற்றிருக்கும் நிலையில், பயிர்கள் அழிந்தாலும் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு தொடர்கிறது.
இந்தச் சூழல் பெண்களின் சுகாதாரத்தையும் பாதிக்கிறது. மருத்துவமனைக்குச் செல்லும் செலவு, போக்குவரத்து வசதியின்மை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமை மற்றும் வருமான இழப்பு போன்ற காரணங்களால் பெண்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ உதவியைத் தள்ளிப்போடுகின்றனர்.
எனவே, பேரிடருக்குப் பின்னரான மீட்புத் திட்டங்கள் வீடுகள், சாலைகள், விவசாயம் மற்றும் கால்நடை வளங்களை மீட்டெடுப்பதோடு முடிந்துவிடக்கூடாது. பெண்களின் உடல்நலம், பாதுகாப்பு, பராமரிப்புப் பொறுப்புகள் மற்றும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் அவற்றில் இடம்பெற வேண்டும்.
மாதவிடாய் முதல் தாய்மை வரை: மறக்கப்படக்கூடாத தேவைகள்
பேரிடரால் இடம்பெயரும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் மாதவிடாய்ப் பொருட்கள் (Menstrual Products) தேவைப்படுகின்றன. ஆனால் அவற்றை வழங்குவது மட்டுமே போதாது. சுத்தமான தண்ணீர், தனியுரிமையுடன் கூடிய கழிப்பறைகள், உடலைச் சுத்தம் செய்துகொள்வதற்கான வசதிகள் மற்றும் பயன்படுத்திய மாதவிடாய்ப் பொருட்களைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான ஏற்பாடுகளும் அவசியம்.
முதல் மாதவிடாயை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு, உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவும் வயதுக்கு ஏற்ற தகவல்களும் நம்பகமான வழிகாட்டுதலும் கிடைக்க வேண்டும். தற்காலிக முகாம்களில் இடநெருக்கடி காரணமாகவோ, தகவல் மற்றும் ஆதரவு இல்லாததாலோ அவர்கள் அச்சத்துடனும் குழப்பத்துடனும் இருக்கக்கூடாது. மாதவிடாய் வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல; அது இயல்பான உடலியல் நிகழ்வு என்பதைச் சிறுமிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் புரியவைக்க வேண்டும்.
மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய காலத்திலும் மாதவிடாய் நிற்கும் காலத்திலும்( Perimenopause and Postmenopause) பெண்கள் உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்களை எதிர்கொள்ளலாம். சிலருக்கு தூக்கப் பிரச்சினைகள், உடல் அசௌகரியங்கள் அல்லது மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். பேரிடரால் பாதிக்கப்பட்டு, தனியுரிமையின்றி நெருக்கடியான இடங்களில் வாழும்போது, ஓய்வின்மை மற்றும் மன அழுத்தம் இந்தச் சிரமங்களைச் சமாளிப்பதை மேலும் கடினமாக்குகின்றன. இப்பெண்களுக்கும் தேவையான தகவல், மருத்துவ ஆலோசனை மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகாலப் பரிசோதனைகள், பிரசவ உதவி மற்றும் அவசர மருத்துவச் சேவைகள் தொடர்ந்து கிடைப்பது உயிர் பாதுகாப்புடன் தொடர்புடையது. பிரசவத்திற்குப் பின்னரும் தாய்மார்களுக்கு மருத்துவப் பராமரிப்பு தேவை. உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது பிற மனநலச் சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவை வழங்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு தனியுரிமையுடன் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கான இடமும் உரிய ஆதரவும் அவசியம்.
கருத்தடை (Contraception) மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைகளும் பேரிடர் காலத்தில் நிறுத்தப்படக்கூடாது. கருத்தடைப் பொருட்கள் கிடைப்பதுடன், அவற்றைப் பயன்படுத்துவது குறித்த நம்பகமான தகவல்களையும் தனிப்பட்ட ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பும் இருக்க வேண்டும். கருத்தடை முறைகள், அவற்றின் பயன்பாடு மற்றும் அவற்றைப் பெறக்கூடிய இடங்கள் பற்றிய தகவல்கள் பெண்கள், ஆண்கள் மற்றும் இளைஞர்களைச் சென்றடைய வேண்டும்.
இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளைப் பெண்கள் சுதந்திரமாக எடுக்க வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கர்ப்பம் தரிக்க வற்புறுத்துவதோ, கருத்தடை பயன்படுத்துவதைத் தடுப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாது. பேரிடர் காரணமாக இடம்பெயர்ந்திருந்தாலும் அல்லது பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் மாறுவதில்லை.
எதிர்பாராத கர்ப்பத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்குத் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய சட்டபூர்வமான மருத்துவ உதவிகள் குறித்த சரியான தகவல்களும் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் கருக்கலைப்புச் சட்டம் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. எனவே, சட்ட வரம்புகளுக்குள் கிடைக்கக்கூடிய சேவைகள் பற்றிய தகவல்களை வழங்குவதுடன், கருச்சிதைவு அல்லது கருக்கலைப்புக்குப் பின்னர் ஏற்படும் உடல்நலச் சிக்கல்களுக்கு அவசர மருத்துவப் பராமரிப்பும் கிடைக்க வேண்டும். இரகசியத்தன்மை, மரியாதை மற்றும் பாகுபாடற்ற சிகிச்சை ஆகியவை இதில் முக்கியமானவை. அவசரக் கருத்தடை என்பது கருக்கலைப்பிலிருந்து வேறுபட்டது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
பாதுகாப்பான தங்குமிடங்களும் தனியுரிமையும் அடிப்படை உரிமைகள்
பேரிடரால் வீடுகளை இழந்த குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் நெருக்கமாகத் தங்கும்போது, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்படுகின்றன. பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பாகக் குளிக்கவும், உடைகளை மாற்றவும், மாதவிடாய்ப் பொருட்களைப் பயன்படுத்தவும் போதுமான இடம் தேவை. கழிப்பறைகளில் வெளிச்சம், பாதுகாப்பான பாதைகள், கதவுகள் மற்றும் மறைப்புகள் இருப்பதும் அவசியம்.
இடநெருக்கடியான முகாம்களில் குடும்பங்களுக்கு தனியான இடம் இல்லாதபோது, வளர்ந்துவரும் குழந்தைகள் பெற்றோரின் அந்தரங்க உறவுகளைப் பார்க்கவோ கேட்கவோ நேரிடலாம். இதைத் தவிர்ப்பதற்குப் போதுமான தனியுரிமை ஏற்பாடுகள் தேவை. இத்தகைய தேவைகளைப் பேசுவது குடும்பங்களை விமர்சிப்பதற்காக அல்ல; பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரும் கண்ணியத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்காகவே.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை (Gender-Based Violence – GBV) தடுப்பதற்கான ஏற்பாடுகளும் தற்காலிக முகாம்களின் திட்டமிடலில் இடம்பெற வேண்டும். பாதுகாப்பாகப் புகார் அளிக்கும் வழிகள், நம்பகமான உதவி மையங்கள், மருத்துவச் சேவைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரகசியத்தன்மையுடன் ஆதரவு வழங்கும் நடைமுறைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு முகாமிலும் வன்முறை நடந்ததாகக் கூறாமல், அத்தகைய அபாயங்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதே நோக்கமாக இருக்க வேண்டும்.
மாதவிடாய் ஏற்படும் திருநர் ஆண்கள்( Transmen) மற்றும் பிற பாலியல் சிறுபான்மையினரின் தேவைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கும் மாதவிடாய்ப் பொருட்கள், பாதுகாப்பான கழிப்பறைகள், தனியுரிமை, கருத்தடைத் தகவல்கள் மற்றும் மரியாதையுடனான சுகாதாரச் சேவைகள் தேவைப்படலாம். பாலின அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை காரணமாக யாரும் அவமதிப்பையோ பாகுபாட்டையோ எதிர்கொள்ளக்கூடாது.
அதேபோல், மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் முதிய பெண்களுக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்ற வசதிகள் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பான கழிப்பறையை அடைவது, மருத்துவ உதவியைப் பெறுவது அல்லது நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொள்வது போன்றவற்றில் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளைத் திட்டமிடும்போதே அடையாளம் காண வேண்டும்.
கொள்கைகள் இருப்பது மட்டும் போதாது
இலங்கையின் குடும்ப சுகாதாரப் பணியகம் (Family Health Bureau – FHB) 2025 டிசம்பர் 1ஆம் திகதி பேரிடர் அவசரநிலைகளில் தாய்மை, இனப்பெருக்கம் மற்றும் சிறுவர், இளம் பருவத்தினர், இளைஞர்களுக்கான சுகாதாரச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டது. கர்ப்பிணிப் பெண்களுடன் தொடர்பைப் பேணுதல், அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்களை அடையாளம் காணுதல், தேவையான மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சுகாதாரச் சேவைகளை ஒருங்கிணைத்தல் போன்ற நடவடிக்கைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இத்தகைய கொள்கைகளும் வழிகாட்டுதல்களும் முக்கியமானவை. ஆனால் அவை நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்குப் போதுமான மருத்துவப் பணியாளர்கள், பயிற்சி, போக்குவரத்து, மருத்துவப் பொருட்கள், நிதி மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தேவை. மருத்துவச்சிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, ஆலோசனை, தொடர் பராமரிப்பு மற்றும் கருத்தடைச் சேவைகளைப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்குவது கடினமாகிறது.
பேரிடர் மதிப்பீடுகளில் வீடுகள், சாலைகள், பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதங்களைப் பதிவு செய்வது அவசியம். அதேவேளை, சுகாதாரச் சேவைகள் தடைப்பட்டனவா, பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் மாதவிடாய்ப் பொருட்கள் கிடைத்தனவா, கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ உதவியை அணுகினார்களா, பாதுகாப்பான கழிப்பறைகள் இருந்தனவா, பராமரிப்புப் பொறுப்புகள் எவ்வாறு அதிகரித்தன என்பனவும் மதிப்பிடப்பட வேண்டும்.
பெண்கள் கூட்டங்களில் கலந்துகொள்வது மட்டுமே அவர்களின் பங்கேற்பு அல்ல. அவர்கள் கூறும் தேவைகள் திட்டங்களிலும் முடிவெடுப்பிலும் நிதி ஒதுக்கீட்டிலும் பிரதிபலிக்க வேண்டும். குறிப்பாக, பெண்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்ளும் உள்ளூர் அமைப்புகள், சமூக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் கருத்துகள் திட்டமிடலில் இடம்பெற வேண்டும்.
பாலினம் மற்றும் வயது அடிப்படையில் தரவுகளைச் சேகரிப்பது யாருடைய தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை அடையாளம் காண உதவும். பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதாரத் தேவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி உண்மையில் அந்தச் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பதும் வெளிப்படையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். கொள்கையில் உரிமைகளை அங்கீகரிப்பது முதல் படி; அந்த உரிமைகள் நடைமுறையில் உறுதிப்படுத்தப்படுவதே முக்கியம்.
கடந்தகால அனுபவங்களை எதிர்காலத் திட்டங்களாக மாற்றுவோம்
இலங்கை 1978ஆம் ஆண்டின் சூறாவளி, 2004ஆம் ஆண்டின் சுனாமி ( Tsunami) மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு போன்ற பேரிடர்களை எதிர்கொண்ட நாடாகும். இந்தப் பேரிடர்களிலிருந்து கிடைத்த அனுபவங்கள், அறிவு, நிறுவனங்களின் திறன் மற்றும் சமூகங்களின் உள்ளூர் அறிவைப் பயன்படுத்தி, எதிர்காலப் பேரிடர்களுக்கான திட்டங்களை முன்கூட்டியே வகுக்க வேண்டும். பாதுகாப்பான தங்குமிடங்கள், சுத்தமான தண்ணீர், தனியுரிமையுடன் கூடிய கழிப்பறைகள், மாதவிடாய்ப் பொருட்கள், கருத்தடைச் சேவைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ உதவிகள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவை பேரிடர் தயார்நிலைத் திட்டங்களிலேயே இடம்பெற வேண்டும்.
இதற்குத் தேவையான நிதி, மருத்துவப் பணியாளர்கள், பயிற்சி மற்றும் அவசரகாலப் பொருட்கள் முன்கூட்டியே உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண்கள், சிறுமிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாலியல் சிறுபான்மையினரின் தேவைகள் திட்டமிடலின் தொடக்கத்திலேயே சேர்க்கப்பட வேண்டும். பேரிடர் ஏற்பட்ட பின்னர் அவசரமாகத் தீர்வுகளைத் தேடுவதற்குப் பதிலாக, ஏற்கெனவே கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் செயல்படக்கூடிய திட்டங்களையும் மாற்றுத் திட்டங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
பேரிடர் தயார்நிலை என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; உள்ளூராட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை, சிவில் சமூக அமைப்புகள் (Civil Society Organisations – CSOs) மற்றும் சமூகங்களும் இதில் பங்கேற்க வேண்டும். குறிப்பாக, பெண்களின் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் கேட்டு, அவற்றைத் திட்டங்களிலும் வரவு செலவுத் திட்டங்களிலும் இணைக்க வேண்டும். பெண்களின் பங்கேற்பு பெயரளவில் மட்டுமல்லாமல், முடிவுகளை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.
சிவில் சமூக அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தி, சேவைகளில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு, பொறுப்புக்கூறலை வலியுறுத்தலாம். அதேவேளை, நிவாரணப் பொருட்களும் மருத்துவச் சேவைகளும் தேவையுள்ளவர்களைச் சென்றடைகின்றனவா என்பதை சமூகங்களுடன் இணைந்து கண்காணிக்கலாம்.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்; ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்!
காலநிலைப் பேரிடர்களை எதிர்கொள்ளும்போது பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதார உரிமைகள் புறக்கணிக்கப்படக்கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் மாதவிடாய்ப் பொருட்கள் மற்றும் தனியுரிமையுள்ள கழிப்பறைகள் கிடைப்பது முதல், மண்சரிவால் இடம்பெயர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ உதவிகள் தொடர்ந்து கிடைப்பது வரை, ஒவ்வொரு தேவையும் பேரிடர் தயார்நிலை மற்றும் நிவாரணத் திட்டங்களில் முன்கூட்டியே உள்ளடக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான நிதி, மருத்துவப் பணியாளர்கள், பாதுகாப்பான வசதிகள் மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பெண்களின் உடல் மற்றும் மனநலம் ஆரோக்கியமான குடும்பங்களையும், ஆரோக்கியமான குழந்தைகளையும், வலுவான சமூகத்தையும் உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெண்கள் தங்கள் உடல்நலம், கர்ப்பம் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளைச் சுதந்திரமாக எடுக்கவும், தேவையான மருத்துவப் பராமரிப்பைப் பெறவும் உரிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். இது பெண்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதோடு, அடுத்த தலைமுறையின் நலனுக்கும் சமூகத்தின் நீண்டகால வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் 52 வீதத்திற்கும் அதிகமானவர்களாக இருப்பதுடன், வாக்காளர்களாகவும், சிறு தொழில் முயற்சியாளர்களாகவும், ஊதியம் பெறும் தொழிலாளர்களாகவும், ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளை (Unpaid Care Work)ச் செய்பவர்களாகவும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் பங்களிக்கின்றனர். எனவே, அவர்களைப் பேரிடரால் பாதிக்கப்படும் மக்களாக மட்டும் பார்க்காமல், பொருளாதாரத்தின் பங்காளர்களாகவும் ஜனநாயகத்தின் செயற்பாட்டு அங்கத்தவர்களாகவும் அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் தேவைகள் பேரிடர் தொடர்பான திட்டமிடல், நிதி ஒதுக்கீடு மற்றும் முடிவெடுப்பில் பிரதிபலிக்க வேண்டும்.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்களின் உடல்நலத் தேவைகளை முன்னுரிமைப்படுத்துவதும், அவர்களின் குரலுக்கு முடிவெடுப்பில் இடமளிப்பதும் பெண்களுக்கு மட்டுமான பொறுப்பு அல்ல; அது ஆரோக்கியமான, சமத்துவமான, பொருளாதார ரீதியாக வலுவான சமூகத்தை உருவாக்குவதற்கான பொறுப்பாகும். பேரிடருக்குத் தயாராகும் ஒவ்வொரு திட்டத்திலும் பெண்களின் தேவைகள் கணக்கில் கொள்ளப்படும்போதுதான், யாரையும் பின்தள்ளாத பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.