இழப்பின் கதை

சந்தித்தேன் அவனை அவன் வீட்டில். முதல் நாளே அவனுடன் தங்கினேன். அன்று உணர்ந்தேன் அவனுக்கு இருந்த சுதந்திரத்தை. ஆணுக்கு பெண்ணுடன் தங்க அனுமதி தேவை இல்லை. ஏனெனில் நடத்தை கெட்டவள் என்ற பட்டம் பெறுபவள் பெண். ஆணை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். ஆண் துணிந்து சுயமாக எதுவும் செய்யலாம். எனவே தான் பெண்ணை பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். பெண்ணை பெற்றோர் அவளை ஒரு சுமையாக பார்க்கின்றனர். பெண்ணை கட்டுப்பாடுகள் உடன் வளர்க்கின்றனர். பெண்ணுக்கு ஊரே பாதுகாப்பாளராக இருந்து அவளை அடக்கி ஆள்கின்றனர்.

திருமணம் முடிக்க தீர்மானித்தோம். ஒரே வீட்டில் குடித்தனம் செய்ய தீர்மானித்தோம். எம் வாழ்வை மீண்டும் ஒரு முறை அமைக்க தீர்மானித்தோம். இது எம் இருவரதும் மறு மண முயற்சி. வாழ்வை இழந்த எமக்கு மீண்டும் ஒரு வாழ்வு அமைய போகும் சந்தோஷம். விவாகரத்து காரணமாக சமுதாயத்தில் தலை குணிந்து நின்ற நாம் தலை நிமிர திருமணம் தான் ஒரே வழியாக அமைந்து. மீண்டும் ஒரு நம்பிக்கை. ஒதுக்கியோர் எம்மை ஏற்று கொள்வார்கள் என்ற கற்பனை. மறு மணம் மூலம் இழந்து போன வாழ்வை பெற ஒரு முயற்சி தான் எம் இணைப்பு. சமுதாயத்தில் ஒரு சம அந்ஸ்தை பெற நாம் இருவரும் இணைய முற்பட்டோம்.

எனக்குள் இவனுடன் வாழுவேன் என்ற தலைகணம் வளர்ந்தது. நான் இவனுடன் ஒரு குடும்பத்தை கட்டி எழுப்புவேன் என்ற ஆணவம் வளர்ந்தது. நான் இவனை எனக்கு ஏற்ற கணவனாக அமைப்பேன் என்ற கர்வம் வளர்ந்தது. மீண்டும் நான் ஒரு குடும்பத்துடன் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்பேன் என்ற பெருமை வளர்ந்தது. நான் எதையும் சிந்தியாது,  என் ஆணவத்தில் ஆடினேன். என் கட்டுப்பாட்டில் எல்லாவற்றையும் வைத்து கொண்டேன். நான் சரித்திரம் படைக்க எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என தவம் இருந்தேன். நான் நினைத்த படி எதையும் யோசியாது வாழ்வை அமைக்க முற்பட்டேன். நல் நெஞ்சங்களின் ஆலோசனைகளை கேட்க மறுத்தேன். என் மன ஆசையை நிறைவேற்வும், சமுதாயத்தில் அந்தஸ்து பெறவும் நான் ஆயத்தமின்றி அவனுடன் குடும்ப வாழ்வை தொடங்கினேன்.

முதல் கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் காத்திருப்பு. குழந்தை சுமப்பது என்பது அவளின் எதிர்பார்ப்பு. பிரசவம் என்பது அவளின் உயிர் துடிப்பு. பெண்ணாக பிறந்ததன் நோக்கம் தாயாவது தான் என்பது என் நம்பிக்கை. ஒரு பெண்ணுக்கு அழகு ஊட்டுபவன் கணவன்.அவளுக்கு அந்தஸ்தை வழங்குபவது அவளது குழந்தை என்பது எனது வேத  வாக்கு. வாழ்வின் உயர்ந்த செல்வம் குழந்தை செல்வம். அதை அடையாதோர் சபிக்க பட்டோர் என நானும் சமுதாயத்துடன் நம்பினேன். குழந்தைக்கான காத்திருப்புக்கு பதில் கிடைத்தது. ஆனால் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் அதிர்ச்சியாக மாறியது. குழந்தையை கொண்டாடும் வேளையில் தனி மரம் ஆனேன். என் குழந்தை  எனக்கு ஒரு பாக்கியமாக தெரியவில்லை. மாறாக அது சுமையாக தெரிந்தது.

என் முன் மூன்று வழிகள் இருந்தன. குழந்தையை எவ்வாறு ஆயினும் பிறந்த பின் அப்புற படுத்துவது. அல்லது குழந்தையை தனி தாயாக வளர்ர்ப்பது, அல்லது குழந்தையயை கருவில் அழிப்பது.

அன்று எனக்கு தோன்றிய முக்கிய வழி கருவில் என் குழந்தையை அழிப்பது தான். அது தான் என் குழந்தைக்கும் எனக்கும் பாதுகாப்பானதாக அமைந்தது. சிறு வயதில் துஷ் பிரயோகத்தை அனுபவித்த எனக்கு என் குழந்தையை இவ்வாறான உலகுக்கு அனுமதிப்பது இயலாத ஒன்றாக காணபட்டது. என் குழந்தையை ஒரு நல்ல உலகுக்கு அனுப்பி வைப்பேன் என்பது என் நம்பிக்கை. ஆறு கிழமையான என் செல்ல பிள்ளையை என் பிறந்த நாளின் மறு நாள் மறு உலகம் அனுப்பினேன். இன்று அக் குழந்தை உயிருடன் இருந்தால் என் வாழ்வுக்கு அக் குழந்தை ஒரு துணை. ஆனால் அன்று நான் என் வாழ்வை வாழ தெரியாத போது அக் குழந்தை ஒரு சுமையாக தெரிந்தது. சுமையை சுமக்க என்னால் முடிய இல்லை.

குழந்தையை அழிக்க நான் அன்று வாழ்ந்த நாட்டு சட்டம் உதவியது. அதற்கான மருத்துவ கட்டணம் இலவசமாக அமைந்தது. அதற்கான மருத்துவ முறை பாதுகாப்பானதும் துரிதமானதும் ஆக அமைந்தது. மிகவும் இலகுவாக குழந்தையை மருத்துவ உதவியுடன் கொன்றேன். நான் செய்த செயலை மூடி மறைத்தேன் ஏனெனில் என் உறவுகள் என்னை புற கணிப்பார்கள் என்ற பயம். என் குழந்தையை அழித்தேன் என்ற குற்ற உணர்வு எனக்குள் இல்லை. நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று ஒரு போதும் நினைக்க இல்லை. ஆனால் சமுதாயம் ஒதுக்கி விடும் என்ற பயத்தால் நான் தினமும் செத்தேன். என் கருவில் இழந்த என் குழந்தை என்னை ஆலோசகரிடம் அழைத்து சென்றது. முதல் முறை என் வாழ்வின் மன காயங்கள் குணமாக்க பட்டன. என் குழந்தையால் நான் இழந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு புது பொலிவு கிடைத்துள்ளது.

கரு கொலை இவ் உலகுக்கு தப்பாக தெரியுது. ஆனால் நான் தினமும் என் வாழ்வை நான்  கொலை செய்தது யாருக்கும் தெரியாது. என் வாழ்வுக்கு பொறுப்பு எடுக்காது வாழ்ந்தது. என்னை ஆண்கள் ஏமாற்ற இடம் கொடுத்தது. ஆணை நம்பி என் வாழ்வை அவன் ஆதிக்கத்துக்கு கொடுத்தது. என்னால் முடியாது என்ற தாழ்வு மன பான்மையால் என்னை அழித்தது. நான் ஒரு பெண் என்று ஆண்களின் கீழாக அடிமையாக வாழ்ந்தது. என் மகிமையையும் முக்கியத்துவத்தையும் கொலை செய்தது. இவை யாவும் கரு கொலையை விட மிகவும் பாரதூரமான கொலைகள்.

சிசுவை கொலை செய்வது குற்றம் என்றால் அவ் சிசுவால் என் எதிர் காலத்தை கொலை செய்வது குற்றம் இல்லையா? கரு கலைப்பு குற்றம் என்றால் என் வாழ்க்கை திட்டங்கள் அக் குழந்தையால் கலைக்க படுவது குற்றம் இல்லையா? ஏன் நாம் ஒரு கரு தரிப்புக்கு முக்கியம் கொடுத்து எம் வாழ்வை நாம் அழிக்க வேண்டும்? எனக்கு எது முக்கியம் என்றதை தீர்மானிக்கும் உரிமை இருப்பது தறா? எனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று கூறுவது தவறா?

கரு கொலையால் இன்று என் வாழ்வு மாற்றம் கண்டு உள்ளது. உண்மையான நல்ல நண்பர்களை சம்பாதித்து உள்ளேன். ஒழிவு மறைவு இன்றி உண்மையை பேசும் ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்கி உள்ளேன். சொந்த காலில் துணிந்து நிற்க பழகி விட்டேன். நடப்பவை நல்லதற்கு தான் என்ற மன நிலையை உருவாக்கி உள்ளேன். எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர் நோக்குகிறேன். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துள்ளேன். நிதானமாகவும் தெளிவாகவும் முடிவுகள் எடுக்கிறேன். என் வாழ்வுக்கு நான் பொறுப்பு எடுத்து உள்ளேன்.

இன்று எம் சமுதாயம் என்னை குற்றவாளியாக பார்த்தாலும். அன்று நான் எடுத்த முடிவு மிகவும் சிறந்தது. நான் வாழ்ந்த அந்த நிலையில் அது ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. இன்று நான் ஒரு துணைக்காக காத்திருக்கும் நான் துணையாக எனக்கு கிடைத்த குழந்தையை கொன்றேன் என்ற கவலை எனக்கு இல்லை. நான் பாவம் செய்து விட்டேன், நரக வாழ்வை அனுபவிக்க போறேன் என்ற பயம் எனக்கு இல்லை. வாழ்க்கை பயண அனுபவத்தில் எனது சிசு கொலையும் ஒரு அங்கம் என்பதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்கிறேன். வாழ்வது ஒரு தடவை, எனவே நடந்தவற்றை குறித்து வருந்துவதால் எந்த பயனும் இல்லை. நடப்பவை குறித்து பயப்படவும் முடியாது. இந்த பொழுதை மகிழ்வுடன் களிப்போம். நாம் சந்தோஷமாக வாழ்வோம். மற்றவர்களை சந்தோஷமாக வாழ வைப்போம். இழப்பின் கதைகளை மகிழ்வுடன் பகிருவோம்.

Social Share: