உள்நாட்டுப் போர் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மனக் காயங்களை ஆற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். PTSD (Post Traumatic Stress Disorder) என்ற ஒரு உளவியல் தாக்கத்தினை நீண்ட காலத்தில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன என்று உளவியலாளரும் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியின் உளவியல் துறை விரிவுரையாளருமான புபுது சேனாரத்ன சுட்டிக் காட்டினார்.
கட்டுக்கோப்பான கலாசார மத விழுமியங்களைக் காரணம் காட்டி இந்த மனக் காயங்களுக்கு மருந்துகளோ ஆற்றுப்படுத்தல்களோ புதிதாக தேவையில்லை என்று கூறப்படுகின்றது. நாட்டின் ஒரு பகுதியில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை கொண்டாடிய ஒரு நாடு என்ற ரீதியில் போரின் மனக் காயங்களை குணப்படுத்தும் தேவைப்பாடு மிக அவசியமான ஒரு விடயமாக இருக்கின்றது. ஆனால் துரதிருஷ்டவசமாக மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அற்றதும் மன நலன் மேம்பாடுகள் பற்றிய அக்கறை அற்றதுமான சமூகமாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
போரின் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் உளவியல் சார்ந்த பணிகளில் ஈடுபட்ட அனுபவம் உள்ள புபுது சேனாரத்ன PTSD என்ற உளப் பாதிப்பு நிலை குறித்து சிறப்பு ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். இவரை எமது பக்கமூனோ இணையத்தளத்திற்காக சந்தித்து கலந்துரையாடினோம். PTSD என்ற மனப் பாதிப்பு குறித்தும் மன ஆரோக்கியத்தின் அவசியம் குறித்தும் அவர் எம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
PTSD என்றால் என்ன?
பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவங்களான போர், சுனாமி, இயற்கை அனர்த்தங்கள், விபத்துக்கள் போன்றவற்றை எதிர்கொண்ட ஒரு சிலருக்கு நீண்ட காலத்தின் பின்பு அப்பாதிப்புகள் மனோ ரீதியிலான வேறு பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதனை ட்ரோமா (trauma) என்றும் கூறலாம். இவ்வாறான மனக்காயங்களை குணமாக்குவது இலகுவான விடயமல்ல. இவ்வாறான பேரதிர்ச்சி நிலையினை எதிர்கொண்டவர்களுக்கு தாம் எதிர்கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் திடீரென நினைவுக்கு வரும். இதனால் ஒருவித மனத் தூண்டலுக்குள்ளாகி அவர்கள் சில நடத்தைகளை வெளிப்படுத்துவர். உதாரணமாக குண்டு வெடிப்பு சம்பவம் ஒருவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக இருந்திருப்பின் பட்டாசுகள் வெடிக்கும் போது அவர் பேரதிர்ச்சிக்குள்ளாவார். இந்த அதிர்ச்சி அவரை பாதிக்கும் ஒரு காரணியாக அமைகின்றது. குண்டுவெடிப்பு சம்பவம் அவரின் மனதில் மாறாத மன வடுவை ஏற்படுத்துவதே இந்த நடத்தைக்கு காரணமாகும்.
இரவில் கெட்ட கனவுகள் வருதல், குடும்ப உறவுகள் மத்தியில் வெறுப்பு ஏற்படுதல், ஆத்திரப்படுதல், ஆவேசமான போக்கு, கழிவிரக்கம், வேதனைப்படுதல், மற்றவர்களை சந்தேகத்துடன் பார்த்தல் என்பன நடத்தைகளை PTSDஇனால் பாதிப்புக்குள்ளானவர்களில் காண முடியும்.
ஒருவரின் ஆளுமை, பிரச்சினைகளைக் கையாளும் விதம், சிறு வயதிலிருந்து வளர்த்துக் கொள்ளும் உளவியல் செயற்பாடுகள், தன்னம்பிக்கை என்பனவற்றின் அடிப்படையில் ஆளுக்காள் இந்நிலைமை மாறக் கூடும். ஒரு சிலரில் PTSD காலப் போக்கில் மாறி விடுகின்றது.
இலங்கையில் உள்நாட்டு மோதல்களும் PTSDயும்
போரினால் மக்களுக்கு ஏற்பட்ட மனப் பாதிப்புகளை கணிப்பது என்பது மிகவும் கடினமான விடயமாகும். இந்த போரின் நேரடி பாதிப்பிற்குட்படாதவர்களும் செய்திகள் வாயிலாகவும் பலதரப்பட்ட தகவல்கள் மூலமாகவும் போரின் பாதிப்புகளை அறிந்து பேரதிர்ச்சிக்குள்ளாகினர். போர்க் கால இடப்பெயர்வுகள், மனித உரிமை மீறல்கள், உறவுகளைப் பிரிதல், உயிரற்ற உடல்களைப் பார்த்தமை, சித்திரவதைகளை அனுபவித்தமை, சித்திரவதைகள் செய்யப்படுவதனைப் பார்த்தமை, சித்திரவதைகளை செய்தமை, உறவுகள் காணாமற் போனமை என்பனவும் ஒரு சிலரில் PTSD ஏற்படுத்தக் கூடிய காரணிகளாக உள்ளன.
சிலர் போர்க்காலத்தில் எதிர்கொண்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் குற்ற உணர்வு கொண்டவர்களாக இருப்பர். ஆபத்திலிருந்து மற்றவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அவர்களுக்குள் மாறாமல் இருக்கும். குறிப்பாக யுத்த மோதல்களில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கு இவ்வாறான ஒரு நிலை ஏற்படும். தனது நண்பரையோ உறவினரையோ காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கமும் வேதனையும் இதற்கு அடிப்படையாக இருக்கும். ‘தங்கள் உறவுகளை நண்பர்களைக் காப்பாற்ற முடியவில்லையே ஆனால் நான் மட்டும் உயிரோடிருக்கின்றேன். ஆதனால் என்ன பயன்’ என்று சிலர் மிகவும் வேதனையுடன் தம்மை வருத்திக் கொண்டிருப்பார்கள்.
வன்முறை அதிகரிப்பும் PTSDயும்
இலங்கையில் 71ம் ஆண்டு முதலே PTSD பாதிப்புக்கான வாய்ப்புகள் ஏற்பட்டு விட்டன. 71ம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சிஇ 88-89ம் ஆண்டு பயங்கர காலப்பகுதி, உள்நாட்டு யுத்தம், சுனாமி மற்றும் இதர இயற்கை அனர்த்தங்கள் என்பனவற்றை இங்கு குறிப்பிட முடியும். இவற்றினால் ஏற்பட்ட PTSD என்ற மனப் பாதிப்பு நாட்டின் வன்முறைகள் அதிகரிப்புக்கு ஓர் பிரதான காரணமாக இருக்க முடியும். இந்த பாதிப்பு பழிவாங்கல் உணர்வாகவும், வெறுப்பாகவும், குரோதமாகவும் வெளிப்பட்டு துஷ்பிரயோகங்கள் பாலியல் வன்புணர்வுகள் போன்ற பல வன்முறை சம்பவங்களுக்கு காரணமாகலாம். இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் பலரை பார்த்தால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் PTSD பாதிப்பினை உடையவர்களாக இருக்கின்றனர் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
சிகிச்சை அளிக்கப்படாத PTSD தாக்கம் பல ஆண்டுகளின் பின்பும் வெளிப்படக் கூடும். எமது சமூகத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உள ஆரோக்கியத்திற்கு வழங்கப்படாமையினால் இவ்வாறான மனப் பாதிப்புகளுக்கு சிகிச்கைள் தேவையில்லை என்ற கருத்து பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான உளவியல் சிகிச்சைகளையும், உள வள உதவி சேவைகளையும் நிராகரித்தன் விளைவுகளை பத்தாண்டுகளின் பின்பு தற்பொழுது எம்மால் அவதானிக்க முடிகின்றது. பார்வைக்கு ஆரோக்கியமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் அண்மைக் கால ஆய்வுகளில் வெளியாகியிருந்தன.
PTSD என்பது வன்முறை அதிகரிப்புக்கும், சிவில் சமூகத்தின் பாதுகாப்புக்கும், தற்காப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் அவற்றுக்கு தீர்வு கண்டு மனக்காயங்களை ஆற்றுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விடயமாகும்.
நீண்ட கால PTSD பாதிப்பின் விளைவுகள்
இந்த விளைவுகளை பிணைந்த சங்கிலி ஒன்றுடன் ஒப்பிட முடியும். PTSDக்கு சிகிச்சை எடுக்காத ஒரு தந்தை வீட்டில் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் போரினால் பாதிக்கப்பட்டவர் இந்த மனவடுவின் உணர்ச்சி வெளிப்பாடுகள் அவரது மனைவிக்கு தொந்தரவினை ஏற்படுத்துகின்றது. பிள்ளைகளுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வீட்டில் தந்தை என்ற வகிபாகத்தினை சரியான முறையில் நிறைவேற்ற முடியாதவராக அவர் இருக்கின்றார். அவர் தனது கோபத்தினை வெறுப்பினைக் கட்டுப்படுத்திக் கொள்ள தனக்குள் தன் உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கின்றார். இதன் போது பிள்ளை தன்னை அறியாமல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி விடுகின்றது. பெற்றோரின் அன்பு பிள்ளைகளுக்கு கிடைக்காமை என்பதும் ஒரு வகை சிறுவர் துஷ்பிரயோகமாகும். இந்த துஷ்பிரயோக நிலை பிற்காலத்தில் அந்த பிள்ளையை மன ஆரோக்கியம் அற்றவராக மாற்றி விடும். பிள்ளை தந்தையைப் பார்த்து வன்முறைகளைப் பிரயோகிக்க பழகிக் கொள்கின்றது.
சிகிச்சையும் விழிப்புணர்வும்
ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டின் ஆங்காங்கே சில பகுதிகளில் உள வள ஆலோசனைகள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக FRC, Sumithrayo, Shaanthi Maargam ஆகிய அமைப்புகளை இங்கு குறிப்பிடலாம். ஆனால் நிதி ஒதுக்கீடுகள் முடிவடைந்த பின்னர் அத் திட்டங்கள் கைவிடப்படுகின்றன. மனவள ஆலோசகர்கள் பற்றாக்குறையும் பிரச்சினையாக உள்ளது.
பொதுவாகவே வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் அனைத்து பாகங்களிலும் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவான மட்டத்திலேயே உள்ளது. வடக்கு கிழக்கில் போரின் பின்னர் அங்கு மன ஆரோக்கிய மேம்பாட்டிற்கான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. நிபுணர்கள் குறைபாடு, அங்கு சென்று பணியாற்ற விரும்பாமை, கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் மன ஆரோக்கியம் குறித்த அக்கறையீனம் போன்றவற்றினை குறிப்பிடலாம். கண்களுக்கு புலப்படும் மாற்றங்கள் பற்றியே அனைவரும் அக்கறை செலுத்துகின்றனர். கண்களுக்கு புலப்படாத விடயங்கள் குறித்து எவரும் பொதுவாக அக்கறை செலுத்துவதில்லை.
மன ஆரோக்கியம், மனவள சிகிச்சைகள் என்பன சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத விடயங்களாகவே உள்ளன. ‘பைத்தியம்’ என்று முத்திரை குத்தப்படுவோம் என்ற அச்சத்தில் மனோவியல் சிகிச்சைகளை மக்கள் மேற்கொள்ள தயங்குகின்றனர். அவ்வாறான சிகிச்சைகளை எடுப்பதனையே ஒரு தவறான விடயமாக சமூகம் கருதுகின்றது. மனத்திற்கு சுகமளிக்கும் சிகிச்சைகள் மற்றும் மனவள பயிற்சிகளை மேற்கொள்வதனையும் தவறாக கருதும் மனப்பாங்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதனால் மனப் பாதிப்புகள் தீவிரமடையும் வரைக்கும் பிரச்சினைகளை கையாள தெரியாமல் உள்ளுக்குள் குழுறுக் கொண்டு வாழும் பலர் நம் சமூகத்தில் இருக்கின்றனர். தலைவலிக்கு ஒரு வலி நிவாரணியை உட்கொள்வது போன்று மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு எளிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியம் என்பதில் மன நலனும் உள்ளடங்கும் என்பதை நாம் மறந்து விட முடியாது.
மன நலன் பற்றிய பிரச்சினை ஒரு குறிப்பிட்ட கட்டத்தினை அடையும் போது தான் அதற்கு மருத்துவ ரீதியிலான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு முன்பு மனநல சிகிச்சைகளை பல வழிகளில் இலகுவாக மேற்கொள்ள முடியும். நம்பிக்கையானவரிடம் பிரச்சினைகளை வெளிப்படையாக கூறும் போதே மனதிற்கு ஆறுதல் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது. வாழ்வில் ஏற்படும் மனக்கசப்புகள், மனத் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு மனவள ஆலோசனைகளைப் பெறுவது தவறல்ல. ஆனால் அவ்வாறு ஆலோசனைகளைப் பெறுவதனையே பாரதூரமான விடயமாக தான் சமூகம் கருதுகின்றது.