இணையப் பயன்பாட்டில் மோசமான அனுபவங்களை எதிர்கொள்ளும் பெண் சமபாலுறவினர்

அண்மையில்  நண்பர் ஒருவர் முகநூல் பற்றிய தனது தனிப்பட்ட அனுபவம் ஒன்றைப்  பகிர்ந்து கொண்டார். சிறுபான்மை பாலினரின் உரிமைகள் (LGBT Rights) குறித்து முகநூலில் பதிவு ஒன்றினை இட்ட வேளை அந்த பதிவு தொடர்பாக கருத்துக் கூறிய ஒருவர் தன்னை மோசமாக சீண்டியதாகக்   கூறி அவர் வேதனைப்பட்டார். ‘நீ ஒரு நல்ல பாடசாலையில் கல்வி கற்றவன் தானே. இப்படி நீ நடந்து கொள்ளலாமா? தைரியமிருந்தால் என்னை வந்து சந்தித்துப் பார்’ என்று அந்த நபர் மிரட்டியுள்ளார். இந்த செயல் தன்னை வெகுவாக ஆத்திரப்படுத்தியதாகக் கூறிய நண்பர் ‘உன்னை சந்திக்க நான் தயார். எங்கே நான் வர வேண்டும்?’ என்று வினவி பதிவிட்டதாகவும், அதற்கு பின்பு அந்நபரை முகநூல் பக்கத்தில் காணவில்லை என்றும் நண்பர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் பற்றி சிந்திக்கும் போது பல கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுகின்றன.  சிறுபான்மை பாலினர் பற்றி முகநூலில் கருத்துக்களை ஏன் சுதந்திரமாக பதிவிட முடிவதில்லை? அவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களையும் பிரச்சினைகளையும் ஏன் சமூகம் இழிவாகவும், கிண்டல் மனப்பாங்குடன் நோக்குகின்றது?  உரிமைகளுக்காகவும், சுதந்திரமான வாழ்க்கைக்காகவும் ஏங்கும் இந்த ஒதுக்கப்பட்ட பிரிவினரைப் பற்றி ஏன் நாம் அனைவரும் கரிசனை கொள்வதில்லை? சட்டம் பற்றி பேசிக் கொண்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த சிறுபான்மை பாலினரின் உரிமைகளை தொடர்ச்சியாக மீறிக் கொண்டு இலங்கை சமூகம் எப்படி மனித உரிமைகள் சார்ந்த எதிர்கால நகர்வுகளை முன்னெடுக்கப் போகின்றது?

இணையப் பயன்பாடு என்பது இன்று அனைவருக்கும் பொதுவான ஓர் விடயமாக உள்ளது.  இதனை இணைய ஜனநாயகம் (internet democracy) என்று கூறும் அளவுக்கு அதன் வியாபகம் உள்ளது. கருத்து சுதந்திரத்தினை உறுதிப்படுத்துகின்ற ஓர் விடயமாக நவீன காலத்தில் நிலவும் இந்த இணையப் பயன்பாட்டு உரிமை என்பது அனைவருக்கும் உரியதாக இருக்கின்றது.  சிறுபான்மை பாலினருக்கும் கருத்துச் சுதந்திரத்தினையும், தமது உரிமைகளை வலியுறுத்தவும், ஒன்றுப்பட்டு செயலாற்றவும், உதவிகளைப் பெறவும்  இணையப் பயன்பாடு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றது. அதேவேளை அவர்களுக்காக குரல் எழுப்புகின்ற தரப்புகளுக்கும்  இணையம் ஊடான தொடர்பு உதவி புரிகின்றது. இந்நிலையில் இவர்கள் அனைவரையும் குறி வைத்து நடத்தப்படும் இணைய தாக்குதல்கள்; அதாவது வெறுப்பு பேச்சுக்கள், கிண்டல்கள், வார்த்தை ரீதியிலான துஷ்பிரயோகங்கள் இலங்கை சமூகத்தின் மனித நேயத்தினை கேள்விக்குட்படுத்துகின்றன என்றே கூற வேண்டும். இது ஒரு வகையில் இணைய வழி துஷ்பிரயோகமாகும்.

இலங்கையில்  3.5 மில்லியனுக்கு மேற்பட்ட முகநூல் பயனாளர்கள் உள்ளனர்.  அதேவேளை வட்ஸ் அப் பயன்பாடு  82.1 சதவீதமாக உள்ளது. இந்த அடிப்படையில் முகநூல் என்பது பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படுதனை உணர்ந்து கொள்ள முடியும்.  இதன்படி சிறுபான்மை பாலினருக்கு எதிரான  இணைய துஷ்பிரயோகம் முகநூல் சார்ந்தே அதிகம் இடம் பெற்று வருகின்றது.

இணையத்தில்  மோசமான அனுபவங்கள் பற்றிய ஆய்வு

இணையத்தில் இலங்கை சிறுபான்மை பாலினரின் அனுபவங்கள் தொடர்பில் பெண்கள் ஊடக் கூட்டமைப்பும் (WMC) தென்னாப்பிரிக்காவை பிரதான தளமாகக் கொண்டு இயங்கும் முற்போக்கு தொடர்பாடலுக்கான சங்கமும் (APC) இணைந்து கடந்த ஆண்டு ஒரு ஆய்வினை நடத்தியிருந்தது. ‘இருமைக் குறியீட்டுக்கு இடையூறு ஏற்படுத்தல்’  (Disrupting the Binary Code) என்ற இந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வில் சிறுபான்மை பாலினர் எதிர்கொண்ட மோசமான இணைய அனுபவங்களாக சில விடயங்கள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வில் 70 சிறுபான்மை பாலினர்  கலந்து கொண்டிருந்தனர்.

இணைய தொந்தரவு (கிண்டல் செய்தல், பெயர் குறிப்பிடல், கண்டனம் தெரிவித்தல்- ஆய்வில் கலந்துகொண்டோரில் 58 சதவீதம்),  புகைப்படங்களை அனுமதிப் பெறாமல் இணையத்தில் பதிவிடல் அல்லது மூன்றாம் தரப்புடன் பகிரல் (44 சதவீதம்), அனுமதிப் பெறப்படாமல் பாலியல்பு அல்லது பால்நிலை அடையாளத்தினை இணையத்தில் பிரசுரித்தல் (41 சதவீதம்), மேற்குறிப்பிட்ட விடயங்களை செய்வதாக வாய்மூலம் அச்சுறுத்தல் (41 சதவீதம்), காணொளிகள் அனுமதிப் பெறப்படாமல் இணையத்தில் இடப்படல் அல்லது மூன்றாம் தரப்புடன் பகிர்தல் (32 சதவீதம்), பௌதீக உலகில் வன்முறை அனுபவம் (20 சதவீதம்), அனுமதி இன்றி சட்ட அமுலாக்கல் அதிகாரிகளினால் கைப்பேசி, மடிக் கணிணி, இணையக் கணக்கு என்பனவற்றைப் பரிசோதித்தல் (13 சதவீதம்) என்பன மோசமான  அனுபவங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.  மேலும் 79 சதவீதமான சிறுபான்மை பாலினர் மேற்கூறிய மோசமான அனுபவத்தினை முகநூலில் பெற்றதாக அந்த ஆய்வு மேலும் சுட்டிக் காட்டுகின்றது.

இணையத்தினூடாக தகவலுக்கான உரிமை, வெளிப்பாட்டு சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம், அந்தரங்கத்திற்கான உரிமை என்பனவற்றை சிறுபான்மை பாலினர் அனுபவிக்கின்றனர்.  ஆனால் இணையப் பயன்பாட்டில் சட்டமும் சமூகமும் சிறுபான்மை பாலினரை பலவீனமாக்குகின்றது என்றே கூற வேண்டும். உரிமைகளை பிரயோகிக்க விரும்பும் சிறுபான்மை பாலினர் மனதில் அவை பயம் மற்றும் உறுதியின்மையை ஏற்படுத்துகின்றன. இணையப் பயன்பாட்டில் சுய தணிக்கை மற்றும் பங்குபற்றுதலை தவிர்த்து விடுவதற்கும் வழியேற்படுத்துகின்றன என்று இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

இலங்கையில் வாழும் சிறுபான்மை பாலினரான பெண் சமபாலுறவினர், ஆண் சமபாலுறவினர், இருபாலுறவினர், திருநங்கைகள் மற்றும் பால் நிலை பற்றிய கேள்விக்குறியாகவுள்ளவர்கள்  இந்த இணைய வெளி பயன்பாட்டில் எவ்வாறான சுதந்திரத்தினை அனுபவிக்கின்றனர் என்பது பற்றி ஆராய்ந்து பார்த்தோமானால் அவர்களுக்கு இந்த உரிமையானது மறுக்கப்பட்டதாகவே இருக்கின்றது எனலாம்.

கண்காணிக்கப்படுதலும் பெண் சமபாலுறவாளர்களும்

இந்த வகையில் பாலியல்புகள் மற்றும் பாலியல் சுதந்திரம் பற்றி பேசுவதற்கு சமூக மட்டத்தில் கட்டுப்பாடுகளும் வரையறைகளும் காலம் காலமாக பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் சமபாலுறவாளர்களும் இந்த வரையறைக்குள் அதிகளவிலான பாரபட்சங்களையும் களங்களத்தினையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாலியல் சிறுபான்மையினர்களில் பெண் சமபாலுறவாளர்கள் அதிகளவிலான அடக்குமுறைகளை எதிர்கொள்பவர்களாக உள்ளமையினால் அவர்கள் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.  ஏனெனில் இவர்கள் சமூகத்தில் பெண்களாக இருக்கின்றனர். குடும்பம் என்ற நிறுவனத்தினைக் காப்பாற்றிக் கொண்டு ஆனால் ஓர் மறைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இணையத்தில் குறிப்பாக முகநூலில் ‘கண்காணிக்கப்படுதல்’ (surveillance)   என்ற அனுபவத்தினை பாரதூரமாக அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

கண்காணிப்பு என்பது கட்டுப்படுத்தலுக்கான வரலாற்று ரீதியிலான கருவியாகும். குறிப்பாக இதனை பெண்கள் தலைமுறை தலைமுறைகளாக அனுபவித்து வருகின்றனர். இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் இணைய ஜனநாயக செயற்றிட்டத்தினை (இந்தியா) சேர்ந்த கலாநிதி அஞ்சா கோவக்ஸ் ‘பெண்களைக் கண்காணிப்பது என்பது சமூகத்தின் நீண்ட கால பயிற்சியாக உள்ளது’ என்கின்றார். ‘ஒழுக்கத்திலிருந்து வில்குவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான பெருந்தொகையான தகவல்களை பெண்களின் அனுபவங்கள் நூற்றாண்டுகளாக தருகின்றன’ என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

சமபாலுறவுக்கு ஆதரவான கருத்துக்களையும், கவிதைகளையும், நட்பைப் பற்றியும் முகநூலில் பதிவிடும் போது  விசேட கண்காணிப்பு வலயத்திற்குள் அவர்கள் வந்து விடுகின்றார்கள். நட்புகளை வளர்த்துக் கொள்தல், ஒன்றிணைந்து செயற்படுதல், தமது உரிமைக்காகக் குரல் கொடுத்தல், விழிப்புணர்வூட்டுதல் போன்ற அணுகுமுறைகளுக்காக பெண் சமபாலுறவாளர்கள் முகநூலை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.  இதனால் அதிகமாக இணைய வழி துஷ்பிரயோகங்களுக்குள்ளாகின்றனர். இதனை அவர்களது அனுபவங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

தகவலைப் பெறுவதற்கான பிரதான ஊடகமாக நான் முகநூலைக் கருதுகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அது எனக்கு பயனுள்ளது. முகநூலில் விடயங்களைப் பகிரும் போது அது பற்றி அனைவரும் பேச ஆரம்பிக்கின்றனர்’ என்கிறார் ஷியாமா. இவர் ஒரு பெண் சமபாலுறவாளர். முகநூலில் அதிக நாட்டமுடைய ஷியாமா இணைய வழி துஷ்பிரயோகங்கள் தொடர்பான அனுபவங்களைக் கொண்டவர். குறிப்பாக அவர் குடும்ப கண்காணிப்புக்குள்ளானவர்.

இங்கே குடும்ப கண்காணிப்பு மற்றும் பொது கண்காணிப்பு என்ற இரட்டை விடயங்களுக்குள் நாம் அகப்பட்டுள்ளோம். குடும்ப உறுப்பினர்கள் எங்கள் முகநூல்களை பின் தொடர்கின்றனர். அதேவேளை நாங்கள் எதனைப் பதிவிடுகின்றோம் என்பதனை அரசாங்கம் கண்காணிக்கின்றது. ஏனெனில் இலங்கை குற்றவியல் சட்டங்களின் படி  சமபாலுறவு என்பது குற்றமாகும்’ என்று ஷியாமா கூறுகின்றார். பெண்களின் பாலியல்பு சார்ந்த  நடத்தைகளின் அடிப்படையிலேயே குடும்ப அலகின் மரியாதையும், கண்ணியமும் மதிக்கப்படுகின்றது. இதனால் பெண்கள் அதிகளவில் கண்காணிக்கப்படுகின்றனர்.

எனது பாலியல் நாட்டம் குறித்தான எனது முடிவினை குடும்பத்தாருக்கு அறிவித்த பின்னர் எனது தாயார் சமபாலுறவாளர் என்ற சொல்லை கூகுள் செய்துப் பார்த்தார். அதில நிறைய பதிவுகள் வந்தன. இதனால் எனது தாயார் அச்சம் அடைந்தார்’ என்று கூறும் ஷியாமா அதன் பின்பு தனது முகநூல் பதிவுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் வலுப் பெற ஆரம்பித்ததாகக் கூறினார். தான் எதனைப் பதவிட வேண்டும் என்றும், எப்படி பதிவுகள் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தலையீடு  செய்ய ஆரம்பித்தனர் என்றும் இதனால் பெரும் ஒடுக்குமுறையை தான் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ‘சமபாலுறவு என்ற  அடையாளத்தினை எவரும் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் குடும்பங்கள் உறுதியாக உள்ளன. இதனால் சிறுபான்மை பாலினர் தொடர்பில் பரிந்து பேசுதல், அவர்களுக்கான விழிப்புணர்வு, கல்வி போன்ற பணிகளைதன்னால் சுதந்திரமாக முகநூலில் முன்னெடுக்க முடியாமற் போய்விட்டது’ என்று ஷியாமா மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

மற்றுமொரு பெண் சமபாலுறவாளர் கலாவின் அனுபவமோ வேறுப்பட்டதாக இருந்தது. தனது முகநூல் பதிவுகள் பணி புரியும் இடத்தில் கண்காணிப்புக்குள்ளானதால் பெரும் மன உளைச்சலை தாம் எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். ‘நான் எனது அடையாளத்தினை எங்கும் வெளிப்படுத்துவதில்லை. ஏனெனில் இந்த சமூகம் பற்றி எனக்கு நன்கு தெரியும். ஆனால் பரிந்து பேசுதல்,  உரிமைகளை வலியுறுத்தல் போன்றனவற்றை முதன்மையாகக் கொண்ட எனது முகநூல் பதிவுகள் பணியிடத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பிரதான பேசுப் பொருளாக உள்ளது. அவர்கள் என்னை சந்தேகக் கண்களுடன் தான் பார்க்கின்றனர். நான் தொடர்ச்சியாக அவதானிக்கப்படுகின்றேன்.’ என்று கலா குறிப்பிட்டார். இதனால் தான் பணியிடத்தில் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாகவும் அவர் கூறினார்.  இதேவேளை முகநூலில் பதிவாகும் புகைப்படங்களை அடையாளம் கண்டு தம்மை அணுகுபவர்கள் காரணமாக தன்னால் சுதந்திரமாக எந்த கருத்தினையும் பதிவிட முடியவில்லை என்றும் கலா கூறினார்.

பெண் சமபாலுறவு, இரு பாலுறவு, திருநங்கைகள் பற்றிய விடயங்களை பதிவிடும் போது அவற்றை அவதானிப்பதற்கென எனது சக ஊழியர்கள் குழுவொன்று உள்ளது. அவர்கள் எப்பொழுதும் இது பயனற்ற விடயம் என்று கூறிக் கொண்டே இருப்பர்’ என்று அனிட்டா குறிப்பிட்டார். இதனால் இணையத்தில் பாதுகாப்பின்மையை நான் உணர்கின்றேன் என அவர் குறிப்பிட்டார். இவ்வாறான பாதுகாப்பின்மை காரணமாக அவரும் அவரது நண்பியும் முகநூலில் இருந்து விலகி வைபர் போன்ற இணைய தொடர்பாடலில் பங்குபற்றுவதாக அனிட்டா குறிப்பிட்டார். இவ்வாறான தொல்லைகளினால் சில பெண் சமபாலுறவாளர்கள் இணையம் தொடர்பான ஈடுபாடுகளை முடக்கிக் கொண்டதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்தார். தமது பால்நிலை அடையாளம் பாலியல்பு சார்ந்த இணைய உள்ளடக்கம் தொடர்பில் வெளியுலகில் வன்முறையை அனுபவித்தவர்கள் பலர் உள்ளனர் என்றும் அவ்வாறானவர்களை தமக்கு தெரியும் என்றும் பெண் சமபாலுறவாளர்கள் சுட்டிக் காட்டினர். மோசமான இணைய அனுபவங்கள் பற்றிய ஆய்வில் இந்த எண்ணிக்கை 20 சதவீதம் என்று ஆய்வு குறிப்பிடுகின்றது.

வலியை தரும் அனுபவங்கள்

குழப்புதல், முட்டுக்கட்டைப் போடுதல், தடைகளை திணித்தல் ஆகிய வடிவங்களில் இணையத்தில்  பல்வேறு வகையான அனுபவங்களை எதிர்நோக்கியதாகவும், இது வலியை தரும் அனுபவங்களாகும் என்பதே சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நபர்களாக இருக்கின்ற பெண் சமபாலுறவாளர்களின் கருத்தாக உள்ளது.

மனித வாழ்வின் அடிப்படை தேவை சுதந்திரமாகும். இந்த சுதந்திரத்தினை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. கருத்துக்களை வெளியிடல், சுதந்திரமாக ஒன்று கூடல், பாரபட்சமின்றி நடத்தப்படுதல்  என்பன சுதந்திரத்தின் வெளிப்பாடுகளாகும். ஆனால் இந்த சுதந்திரத்தினை வெளிப்படையாக அனுபவிக்க முடியாத நிலையில் பெண் சமபாலுறவாளர்கள் உள்ளடங்கலாக சிறுபான்மை பாலினர் உள்ளனர்.  இந்த நிலையில் சுதந்திரத்தினை ஓரளவுக்கு அனுபவிக்கக் கூடிய வாய்ப்பினைத் தரும் இணைய வெளிப் பயன்பாட்டிலும் இவ்வாறான அடக்குமுறைகளும், முட்டுக்கட்டைகளும் இருப்பது பெண் சமபாலுறவாளர்களைப் பொறுத்தவரை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில் அவர்கள் இந்த சமூகத்தில்  பெண்களாக வாழ்கின்றனர். பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான அடக்குமுறைகளையும் அவர்கள் அனுபவிக்கும் அதேவேளை அவர்கள் பெண் சமபாலுறவாளர்களாக மேலும் சமூகத்தின் ஒதுக்கப்பட்ட நிலைமைக்கும், பன் மடங்கு அடக்குமுறைக்கும் உட்படுகின்றனர். இதன்படி இணைய ஜனநாயகம் என்பது அவர்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.

ஆண் சமபாலுறவினரையும், திருநங்கைகளையும் ஓரளவு சகித்துக் கொள்ளும் இணைய சமுதாயம் உட்பட எமது சமுதாயம் பெண் சமபாலுறவாளர்களை குறி வைப்பதன் காரணம் என்ன?  பெண்களே சந்ததியினரை உருவாக்குகின்றனர். இதனால் தான் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்த ஆண்களும் தமது சமூகத்தின் பெண்களின் கருவளத்தினை (fertility) தீர்;மானிப்பதில் ஆழ்ந்த அக்கறைiயும் ஈடுபாட்டினையும் காட்டுகின்றனர். இந்த அடிப்படையில் பார்க்கும் போது பெண் சமபாலுறவு என்பது கருவளத்திற்கு மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது என்றும், பெண்ணாகப் பிறந்தால் சந்ததிகளைப் பெற்றுத் தான் ஆக வேண்டும் என்ற வரன்முறையை சமபாலுறவு மீறுகின்றது என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இங்கு பெண்களின் கருவளத்தினை தீர்மானிக்கும் சக்தியினை ஆண்கள் இழந்து விடுகின்றனர். இதுவே இந்த பெண்களின் அனைத்துவித அடக்குமுறைகளுக்கு காரணமாக உள்ளது எனலாம்.

எவ்வாறாயினும் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பினரின் கருத்துப்படி இலங்கையில் பெண் சமபாலுறவாளர்கள், இரட்டைப் பாலுறவு பெண்கள், மற்றும் பாலியல்பு மாற்றப்பட்டவர்கள் பற்றிய ஆய்வுகளில் அவர்கள் அதிக பாரபட்சத்தினையும்,  துன்புறுத்தல்களையும், கரிசனையற்ற நிலையையும் எதிர்கொண்டு வருகின்றனர். சமபாலுறவு குற்றம் என்ற இலங்கை சட்டம் காரணமாக அவர்கள் தாம் எதிர்கொள்ளும் அநீதிகளை வெளிப்படுத்த முடியாதுள்ளனர். நீதியைப் பெறுவதற்கான முயற்சிகளைப் பெறுவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இவர்கள் முழுமையான சுதந்திரத்தினையும்,  பிரஜைகள் என்ற அந்தஸ்தினையும் அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

Webp.net-resizeimage (68) பிரியதர்ஷினி சிவராஜா கடந்த 10 ஆண்டுகளாக எழுத்தாளராக பணி புரிந்து வருகிறார். இவர் வீரகேசரி பத்திரிகையில் பாராளுமன்ற நிருபராகவும் பணியாற்றி உள்ளார். இவர் பால்நிலை மற்றும் மனித உரிமைகள் போன்ற தலைப்புகளில் விசேட ஆர்வம் கொண்டு உள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது.

Social Share: