சிலதை எழுதுவது கூட சமூக விரோதிகளுக்கு குற்றத்தை நோக்கி பயணிப்பதற்கு புதிய பாதையை திறந்து கொடுத்து விடும். ஆனாலும் சிலதை கூறாது விடுவது என்பதும் என்னைப் பொருத்த வரையில் சமூகத்துக்கு செய்யும் துரோகம் தான். இது போன்றவர்கள் எங்கிருந்து தான் பிறந்து வருகின்றனறோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு நினைத்தும் பார்க்க முடியாத நிலையில் சிலரது செயல்கள்.
அன்று பஸ்ஸில் மிகுதியான சனநெரிசல், புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருந்தது. நான் ஏறி கதவுக்கு அருகில் எனக்கு சௌகரியமான இடத்தை தேடிக் கொண்டேன். ஏதேர்ச்சையாக திரும்பி கீழே பார்த்தேன். எனது வயதையொத்த சற்று கௌரவமான ஆடை அணிந்த ஒரு இளைஞன் தனது ஸ்மார்ட் போனை டச்செய்து கொண்டிருந்தான். அவனுக்கு பக்கத்தில் அதி நவீன ஆடை அணிந்த ஒரு பெண் மேலே ஏறுவதற்கு முயற்சித்துக் கொண்டு இருந்தார். அவனது போனில் தான் எனது பார்வை, ஏனென்றால் என்னால் வேறு எங்கும் கழுத்தை திருப்ப முடியாத அளவு நெரிசல்.
அவன் ஓன் செய்ய கெமரா தொழிற்பட ஆரம்பித்தது. அதில் ரெகோர்ட் என்று இருந்தது அதனை ஒன் செய்தவன் மீண்டும் சாதாரணமாக போனை வைத்துக் கொண்டு இருந்தான். மேல் படியில் நான், எனக்கு ஒரு படி கீழே அவன், அவனோடு அந்தப் பெண். அவன் தனது போனை அந்த பெண்ணின் உடல் தெரிவது போல் வைத்துக் கொண்டு அவன் பாட்டுக்கு நின்று கொண்டு இருந்தான். அவளது மார்பகங்களுக்கு நேர் மேலாக அவனது போன். அவளே அறியாது ஏன் அங்கு அவனையும் கடவுளையும் தவிர வேறு யாருமே அறியாது அன்று அவள் படம் பிடிக்கப் பட்டுக் கொண்டு இருந்தாள். அப்போது எனக்கு அதன் பாரதூரம் தெரியவில்லை. ஆனாலும் அந்த சம்பவம் மனதை உறுத்திக் கொண்டு தான் இருந்தது.
எனது நண்பன் ஒருவன் புது ஸ்மாட் தொலைபேசி எடுத்து அதன் வசதிகளை கூறிக் கொண்டு இருக்கும் போது தான் அந்த ஸ்பை கெம் என்ற எப்பை (App) பற்றியும் கூறினான். அதன் தொழிற்பாட்டையும் கூற அனைவரும் உரைந்து போய் விட்டோம்.
மனிதம் இன்று விலை கூவி விற்கப்படுகின்றது. பிறரது மானங்கள் தான் இன்று சந்தையில் கிராக்கியுள்ள விற்பனைப் பண்டமாகி விட்டன. ஒரு நாளைக்கு மாத்திரம் ஆபாச வலைதளங்களில் இது போன்ற திருட்டு வீடியோக்கள் 2000 க்கும் மேல் பதிவேற்றப் படுகின்றன. இந்த முதலாளித்துவ சடவாதிகளின் கொமராக்காளில் இருந்து தன் மானத்தை காத்துக் கொள்வதே சகோதரிகளுக்கு பெரிய தலைவலியாகி விட்டது. யாரை நம்புவது?
நம்பி கூடவே திரியும் காதலனே, உடன் பிறந்த சகோதரனே, கட்டின கணவனே , அப்பாவே இன்று தன் துணையை, சகோதரியை, மகளை திருட்டு தனமாக படமெடுத்து இணையதளங்களுக்கு விற்பனை செய்யும் போது என்ன செய்தி அவர்கள் வாழ்வது?
மகனின் படுக்கையறையில் கெமராவை ஒழித்து வைத்து அவர்களது உடலுறவை திருட்டுத்தனமாக பார்ப்பதை மகள் கையும் களவுமாக பிடித்த சம்பவத்தை அன்மையில் வந்த பிரபலமான பத்திரிகை செய்தியில் படித்திருப்பீர்கள். இதனை எங்கே போய் கூறுவது?
3ல் ஒரு பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் உலகெங்கும் ஏதோவொரு வித வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.
73% பெண்கள் இணையத்தில் பாலியல் தொடர்பான வன்முறையை சந்தித்திருக்கிறார்கள்.
5ல் ஒருவர் இணையம் தங்களுக்குப் பொருத்தமற்றது என்று கருதுகிறார்கள்.
27 மடங்கு பெண்கள் ஆண்களை விட இணையத்தில் தொல்லைக்கு ஆளாகக்கூடும் (முற்போக்குத் தொடர்புக்கான சங்கம் மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டுக்கான ஐ.நா பிராட்பேண்ட் ஆணையம்)
2015 இணைய வெளியில் இது போன்ற மோசமான நடத்தைகளில் 95% பெண்களை நோக்கியதாகவே இருப்பதாக ஐநா கணிக்கிறது.
அவர்கள் ஏன் தனது உடல் உருப்புக்கள் வெளிப்படும் விதத்தில் ஆடை அணிய வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம்.
ஒவ்வொரு தனிநபருக்கும் இந் நாட்டில் தாம் விரும்பியதை அணியும் உரிமை உள்ளது. தனக்கு எது சௌகரியமோ அதனைத் தானே அவர்களும் அணிவார்கள், அவரவர் அவரவரின் கடமைகளை செய்தால் யாவரும் நலம்.
பாதிக்கப் படுபவர்கள் ஒரு போதும் மனதால் தளரத் தேவையில்லை.
அவர்களது மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் ஒரு போதும் நடக்கவில்லை. எனவே மனதால் தளரத் தேவை இல்லை.
உங்கள் அனுமதியின்றி நீங்கள் படம் பிடிக்கப்பட்டது உங்கள் உரிமையோடு தொடர்பானது. நீங்கள் உரிமை மீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக உங்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
கிராமப்புரங்களில் ஓர் வழக்காற்று மொழி உள்ளது. “நாய் இருக்கும் வீதியில் கோழி அவதானமாகத் தான் போக வேண்டும்”. என்ன தான் நவீனம் என்று உலகு வேகமாக வளர்ந்து கொண்டு போனாலும் ஆடைச் சுதந்திரம், தனி நபர் உரிமைகள் என்று வந்தாலும் நவீன ஆடைகளை சாதாரனமாக பார்க்கும் அளவுக்கு வளர்ந்து வரும் நாடுகள் இன்னும் பக்குவம் அடையவில்லை.
பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பல்லாயிரம் பேர் பல்வேறு விதமாக பயணம் செய்வார்கள், செல்போன் என்பது நமது உடலில் ஒரு ஆறாம் உருப்பாக சேர்ந்து கொண்டு விட்டது.
அடுத்தவனது செல்போனை எட்டிப் பார்ப்பது நாகரிகம் இல்லை நமது வேலைகளை மாத்திரம் நாம் பார்த்துக் கொண்டால் யாவரும் நலம் எனும் சிந்தனை ஏன் நம் சமூகத்திற்கு இன்னும் வரவில்லை?
எது எவ்வாறாயினும் பொதுப் படையாகப் பார்க்கும் போது சமூகத்தில் ஓர் மாற்ற அலையை தோற்றுவிக்க வேண்டிய பாரிய கடப்பாட்டில் நாம் உள்ளோம். அதேவேளை எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது.
எவ்வழி நல் வழியோ அவ்வழியே நம் வழியாக இருக்கட்டும்.
![]() |
பாரிக் மொஹம்மத் பேராதனை பல்கலைக் கழகத்தில் வெளிவாரியாக கலைத்துறையில் கல்வி கற்கின்றார். சஞ்சிகைகள், முகநூல் என்பவற்றில் வேறு பெயர்களிலும் சொந்தப் பெயரிலும் எழுதுபவர். ஒரு சிறுவர் பயிற்றுவிப்பாளன். ஒரு வாசகன். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது |
