இந்தியாவின் சபரிமலை ஐப்பன் தேவஸ்தானத்துக்கு சகல வயது பெண்களும் செல்லலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருக்கின்றது. இலங்கையிலும் கூட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தீர்ப்பினை வழங்கிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவில் ஒரு பெண் நீதிபதி, பெண்களுக்கு எதிரானதொரு தீர்ப்பினையே வழங்கியிருந்தார். சபரிமலையில் எவ்வாறு 10-50 வயதுக்கிடைப்பட்ட பெண்களை அனுமதிக்காது இதுவரை காலமும் சம்பிரதாயமாக இருந்து வருகின்றதோ அதுபோலவே மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் சம்பிரதாயமும் மேலோங்கியிருக்கின்றது.
பெண்களையும் வழிப்படி அனுமதிக்கும் இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமுல்படுத்தப்பட்டாலும், கோயிலுக்கு வெளியே கலவரத்தை உண்டாகும் ஆர்பாட்டக்காரர்களால், பெண்களுக்கு கோயிலுக்குள் செல்ல முடியாமல் உள்ளது. வழிபடவரும் பெண்களை மற்றும் அங்கு இருக்கும் ஊடகவியலாளர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்லால் மற்றும் போத்தல்களால் அடித்து திருத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆர்பாட்டக்காரர்களில் அநேகமானோர் பெண்கள் என்பது குறிபிடித்தக்கது.
இந்தியா , பங்களாதேஷ் போன்ற நாடுகளிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்களை கிராமத்தைவிட்டே ஒதுக்கிவைக்கும் நிலை இன்றும் காணப்படுகின்றது. சட்டங்களை மதிக்காத பலரும் வாழ்கின்ற இந்நாடுகளில் சம்பிரதாயங்களை தூக்கிப்பிடிப்பது வேடிக்கையானது. அதிக பெண் தெய்வங்களை வணங்கும் இந்து மதத்தினரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் நிலையில், மாதவிடாயை காரணம் காட்டி பெண்களை விலக்கிவைப்பது அறியாமையையே வெளிப்படுத்துகின்றது.
சபரிமலைக்கு வழிபாட்டுக்குச் செல்லும் யாத்திரிகர்கள் 18 புனித படிகளை ஏறவேண்டும். சபரிமலை தேவஸ்தானத்தின் சம்பிரதாயப்படி இந்த 18 படிகளும் மிகப் புனிதமானவை. 41 நாட்கள் கடும் விரதம் இருக்காமல் இதனை ஏறமுடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்லும் முன் சில சடங்குகளை யாத்திரிகர்கள் பின்பற்ற வேண்டும். கருப்பு மற்றும் நீல வண்ண உடை மட்டுமே அணிய வேண்டும். 41 நாட்கள் வரை விரதம் இருந்து வழிபாடு முடியும் வரை அவர்கள் சவரம் செய்யக்கூடாது. நெற்றியில் சந்தனம் வைத்திருக்க வேண்டும். 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்ற நிலையில் உடலியல் காரணங்களால் மாதவிடாய் இருக்கும் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாது என்பதே பலருடைய பொதுவான விவாதமாக இருக்கின்றது.
சட்டமானது , இவ்விடயத்தினை பாலின சமத்துவத்துக்கு எதிரானதாகவே பார்க்கின்றது. சம்பிரதாயங்களே இதனை ஒரு தீட்டாக பார்க்கின்றன. இந்த இருநிலை விவாதங்களே இழுபறிக்குக் காரணமாக இருக்கின்றன. இன விருத்திக்கான ஆதாரமாகவே மாதவிடாய் இருந்து வருகின்றது. உடல் ரீதியான தூய்மையினை விடவும் மனரீதியான தூய்மையே உயர்வாகக் கொள்ளப்படுகிறது. நூறு வீதமான தூய்மையான உடல் என்பது எப்போதும் சாத்தியமில்லை . சபரிமலை ஆதரவாளர்கள் மாதவிடாயை உடலியல் ரீதியில் சுத்தமில்லாத ஒன்றாகவே கணிக்கின்றார்கள். அவ்வாறெனில், சபரிமலை செல்லும் சகலருமே உடலியல் ரீதியில் சுத்தமில்லாதவர்கள் என்பதை அறிவியல் ரீதியாக நிறுவ முடியும்.
சபரிமலைக்குச் செல்பவர்கள் சுத்தமாக இருக்க வேண்டுமென்பது விதிமுறையாக இருப்பதால், சபரிமலையின் 18 படிகளை ஏறுபவர்கள் அருகிலுள்ள பம்பை நதியில் நீராடிவிட்டே செல்லவேண்டும். ஆனால் கேரள மாநிலத்தின் மிக அசுத்தமான ஒரு நதியாகவே இந்த பம்பை நதி இருக்கின்றது. நீரின் தூய்மையை அளக்கும் மலஞ்சார் பற்றிரியமானது 100 மில்லி லீற்றர் நீரில் அதிகபட்சம் 500 இருக்கலாம். ஆனால் பம்பை நதியில் 120-140 மடங்கு அதிகமாக 60,000 முதல் 70,000 வரை உள்ளது. பம்பை நதியில் இந்த அளவு அதிகமாக இருப்பதற்கு அதிகளவுக்கு மனிதக் கழிவுகள் கலப்பதுவே காரணமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பம்பை நதியில் குளிப்பவர்கள் எவரும் உடல் ரீதியாக சுத்தமானவர்கள் என்று கூறமுடியாது.
எனவே உடல் சுத்தத்தை பெண்களின் உடலில் மாத்திரம் வேறுவகையாக பார்ப்பது அறியாமையாகும். சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும் சாதி , மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் ஒரேமனதுடன், ஒரே வேட்கையுடன் சுவாமிகளின் திருவடியை அடைய வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும் நிலையில், 10-50 வயது வரையான பெண்களை இதில் விலக்கி வைப்பது குறிக்கோளை மீறும் ஒரு செயலாகவே இருக்கின்றது.
மாதவிடாய் என்பது ஒரு பெண் பிள்ளை வாழ்வில் சாதாரண மற்றும் இயற்கையான ஒருபகுதி. மாதவிடாயின் போது என்டோமெட்ரியம் என அழைக்கப்படும் கருப்பை உட்படலம், மாதவிடாய் சக்கரத்தின் போது கெட்டியாகி கருத்தரித்தலுக்குத் தயாராகும். இதன் பின் இது சிதைவடைந்து பெண்களின் யோனி வழியாக வெளியேற்றப்படும். சாதாரணமாக மாதவிடாய் சக்கரம் மாதாமாதம் நடைபெறும் . இது 3-7 நாட்கள் வரை நீடிக்கும். சராசரியான மாதவிடாய் சக்கரம் 28 நாட்களாகும். மாதவிடாய் சக்கரம் 21 நாட்களிலோ , 35 நாட்களிலோ ஏற்படலாம். அநேகமான பெண்களுக்கு மாதவிடாய் சக்கரம் 25-30 நாட்கள் வரை நீடிக்கும்.
‘கடவுளை நம்பினால் கடவுள் படைத்த படைப்புகளையும் நம்பவே வேண்டும். மாதவிடாய் சக்கரம் இல்லையென்றால் இந்த உலகில் யாருமே இல்லை. அதை எப்படி தீட்டு என்று கூறமுடியும்? இது ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. மாதவிடாய் என்பது மனிதனுடைய முக்கியமான காலகட்டம். இதை தீட்டு என்று சொல்வது ஒரு தவறான கருத்தியல். அப்படியென்றால், அந்த மாதவிடாயுடன் கலந்து பிறக்கும் அனைவருமே தீட்டானவர்களென’ பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளரான நளினி ரட்ணராஜா தெரிவித்துள்ளார்.
‘கடவுளே பெண்களின் உடலை அவ்வாறு படைத்துள்ளார். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்கும் நிலையில், பெண்களை மாத்திரம் அனுமதிக்க மறுப்பது எவ்வகையில் நியாயமானது? இது பெண்களை பாரபட்சப்படுத்துவதற்கும் ஒதுக்குவதற்கும் கொண்டுவந்த ஒரு முறையாகவே இருக்கின்றது. 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்பவர்களில் ஒரு சிலருக்கு , மலையேறிவிட்டு கீழிறங்கும் போது மலையடிவாரத்தில் எல்லாமே கிடைக்கின்றது. பாலியல் தேவைகளுக்குப் பெண்கள், மதுபானம் என்று எல்லாவற்றையும் பதம் பார்த்துவிட்டே ஊருக்கு வருகின்றனர். அப்படியென்றால் அது சரியா?
கடவுளென்பதே வியாபாரமாக மாறிவிட்டது. பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்காததற்கு வியாபார நோக்கமும் ஒரு காரணம். மலையேறி கீழே வரும் போது சகல இச்சைகளிலும் ஒரு நிலை இருக்கிறது. பெண்கள் சென்றால் இவையனைத்தையும் தடுத்து விடுவார்கள். கணவன் -மனைவி செல்லும் நிலையேற்பட்டால் கணவனும் இதை அனுபவிக்க முடியாமல் போகும். இதனால் வியாபாரம் கெட்டுப்போகும்.
பெண்கள் தீட்டானவர்கள் என்பது சமூக கட்டமைப்பிலேயே விதைக்கப்பட்டிருக்கின்றது. மாதவிடாய் காலத்தில் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறியவர்களே அம்மாக்கள் தானே. இப்படி நாம் வீட்டில் வளர்க்கப்பட்டிருக்கிறோம். அந்த மனநிலையில் இருப்பவர்களே இந் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இருக்கின்றார்கள். அவர்களுடைய கருத்தை மொத்த பெண்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.
2006 ஆம் ஆண்டே இவ்வழக்கு தொடுக்கப்பட்டாலும் 2016லேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
- பெண்களிலே பெரும்பாலானோர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்க்கின்றார்கள். மேலும் அவர்கள் 10-50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்காத பழக்கத்தினையே பின்பற்ற வேண்டும்
- மக்களின் பழக்கவழக்கங்களில் தொடர்ந்து நீதி அமைப்புகள் விளையாடும் பட்சத்தில், தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவிடும்.
- பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் பெண்கள் யாரும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறவில்லை.
மக்களின் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களில் நீதித்துறையை தலையிட வேண்டாமெனக் கூறுகின்ற மக்கள், இந்திய மக்களின் கடும்போக்கு வழக்கங்களான ஆணவக்கொலை , கருணைக்கொலை ,சீதனம், சிறுவர் திருமணம் போன்றவற்றில் நீதிமன்ற தலையீட்டை கட்டாயம் வலியுறுத்துவதற்கான காரணம் என்ன? சபரிமலை தரிசனத்தில் பாதுகாப்புப் பிரச்சினைகள் மேலெழும் வாய்ப்பிருக்கின்றது என்ற அறிவிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் அவை தீர்க்கக்கூடிய பிரச்சினைகளாகவே இருக்கின்றன. ஆனால் மாதவிடாய் எனும் இயற்கை உடலியல் மாறுதலை தெய்வக்குற்றமாக அணுகுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல .
10 வயதுக்கு முன்னும் 50 வயதுக்குப் பின்னும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாதென்பது பொதுவான கணிப்பாக இருக்கிறது. அதனால் அவர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதேவேளை ஐயப்பன் சுவாமி ஒரு பிரமச்சாரி என்ற ஐதீகத்தாலும் பெண்கள் அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது. எனவே மாதவிடாய் ஏற்படும் பெண்கள் பிரமச்சாரியான ஐயப்பனுக்கு எதிரானவளாக பார்க்கும் நிலையிருக்கிறது. இதில் மாதவிடாய் ஏற்பட்டாலே அவள் ஒரு கன்னிப்பெண் என்ற அந்தஸ்தை வழங்குகின்ற சமூகம் , ஏன் பெண்கள் மாதவிடாய் காரணங்களுக்காக சபரிமலைக்கு அனுமதி மறுக்கப்படுகின்றார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.
![]() |
கருப்பையா பிரசன்னகுமார் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் முழுநேர ஊடகவியலாளராக கடமை புரிந்து கொண்டு சமூக அபிவிருத்தி தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகின்றார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது. |

