எச்.ஐ.வி-க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART) என்று அழைக்கப்படுகின்றன. இலங்கையில் எச்.ஐ.வி சிகிச்சையானது தேசிய எச்.ஐ.வி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதன் கீழ், இலங்கை முழுவதும் 30 ART சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் உள்ள மருத்துவர்கள், எச்.ஐ.வி பாதிப்புடன் வாழும் மக்களின் இரகசியத்தன்மையைப் பேணி, சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.
எச்.ஐ.வி உடன் வாழும் ஒருவருக்கு (PLHIV) சிகிச்சை ஏன் தேவைப்படுகிறது?
- உடல்நலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவதற்காக
எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களால், தவறாமல் சிகிச்சை பெறுபவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
- எச்.ஐ.வி மற்றவர்களுக்கு (துணை, பிறந்த குழந்தைகள் மற்றும் பிற பாலியல் துணைவர்களுக்கு) பரவுவதைத் தடுப்பதற்காக
ART மருந்துகளால் நடப்பது என்ன?
தற்போதைய ART சிகிச்சைகள், இரத்தத்தில் உள்ள வைரஸின் அளவைக் கண்டறிய முடியாத அளவிற்கு குறைக்கின்றன. வைரஸின் அளவு குறைவாக இருக்கும்போது, எச்.ஐ.வி நோயால் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும். தற்போதைய எச்.ஐ.வி சிகிச்சைகளின் நோக்கம், வைரஸைக் கண்டறிய முடியாத அளவில் வைத்திருப்பதே ஆகும்..
வைரஸின் அளவு குறையும்போது, நோயெதிர்ப்பு மண்டலம் மீளத் தொடங்குகிறது. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் கட்டுமானக் கூறுகளான CD4 செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று வருவதற்கான ஒரு அறிகுறியாகும்.

நீங்கள் எச்.ஐ.வி சிகிச்சையைத் தொடங்கினால், அதை வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ART சிகிச்சையை நிறுத்திவிட்டால், மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாகலாம். இது வைரஸைக் கட்டுப்படுத்துவதை மேலும் கடினமாக்கும். அதனால்தான் உங்கள் சிகிச்சையைத் தவறாமல் பின்பற்றுவது முக்கியம்.
சிகிச்சையை முறையாகப் பின்பற்றுதல்
- மருந்துகளை உங்கள் அன்றாட வாழ்க்கையின் பழக்கமாக மாற்றிகொள்ளுங்கள். காலையில் ஒரு கப் தேநீர் பருகுவதற்கு நாம் மறப்பதில்லை, அப்படிதானே? மருந்துகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் தினமும் சேர்த்து கொள்வதன் மூலம் மறதியை குறைக்கலாம்
- நினைவூடிகளை பயன்படுத்துங்கள். நம் அனைவரிடமும் கைபேசி உள்ளது. நீங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில் ஒலிக்குமாறு அலாரத்தை அமைக்கவும். எச்.ஐ.வி பாதிப்புடன் வாழும் மற்றும் ART சிகிச்சையில் இருக்கும் ஒரு நண்பரின் உதவியைப் பெற்று, மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் வரும்போது உங்களுக்கு நினைவூட்டச் சொல்லுங்கள். உங்களுக்கு நினைவூட்டுவதற்காக ஒவ்வொரு நாளும் ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தியைப் பரிமாறிக்கொள்ளுங்கள்.
- உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுங்கள். நீங்கள் போதைப்பொருள் அல்லது மதுவைப் பயன்படுத்தினால், அது உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள மறக்கச் செய்துவிடும். அது உங்கள் தினசரி மருந்து எடுத்துக்கொள்ளும் வழக்கத்திலும் தலையிடக்கூடும். எனவே, எச்.ஐ.வி பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?
சிலர் எச்.ஐ.வி மருந்துகளால் எந்தப் பக்க விளைவுகளும் இன்றி தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்கின்றனர். இருப்பினும், எல்லா மருந்துகளையும் போலவே, ART சிகிச்சையும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சிலருக்கு ART சிகிச்சையால் எலும்பு அல்லது சிறுநீரகப் பக்க விளைவுகள் ஏற்படலாம்.
சிகிச்சையின் முதல் சில வாரங்களில், குமட்டல், தலைவலி, தோல் தடிப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சோர்வு போன்ற தற்காலிகமாக விளைவுகளை நீங்கள் அனுபவிக்கலாம், ஆனால் இவை படிப்படியாக சரியாகிவிடும். இவ் விளைவுகள் பல மாதங்களுக்குத் தொடர்ந்தால், அது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.
எச்.ஐ.வி-க்கு மாற்று சிகிச்சைகள் உள்ளதா?
எச்.ஐ.வி-க்கான சிறந்த சிகிச்சை தற்போது கிடைக்கக்கூடிய ART ஆகும். எனவே, மாற்று சிகிச்சைகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடுவது மிகவும் முக்கியம்.
நம்பிக்கைகள், பிரார்த்தனைகள் மற்றும் தியானம் ஆகியவை மாற்று சிகிச்சைகளாகக் கருதப்படுவதில்லை. உங்கள் மருத்துவர் வழங்கிய சிகிச்சைத் திட்டத்தைப் பின்பற்ற அவை உங்களுக்கு உதவக்கூடும்.
இலங்கையில் உள்ள சில மருத்துவர்கள் ஆயுர்வேத மருந்துகள் எச்.ஐ.வி-யைக் குணப்படுத்தும் என்று கூறியிருந்தாலும், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
நினைவில் கொள்ளுங்கள் – எச்.ஐ.வி-க்காக ART-ஐ சரியாக எடுத்துக்கொள்பவர்கள் வைரஸைப் பரப்புவதில்லை. எனவே, நீங்கள் எச்.ஐ.வி-யுடன் வாழும் ஒருவராக இருந்தால், உங்கள் மருந்தை நிறுத்துவது, வைரஸை மற்றவர்களுக்குப் பரப்பும் அபாயத்தை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.