இந்து மதமும் பெண்களுக்கு எதிரான கலாசார ரீதியான வன்முறைகளும்

மதம் மனிதனை நல்வழிப்படுத்தத் தோன்றியது என்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரமாகத் தான் இருக்கிறது. அவ்வாறான மதத்தின் வழியான நடைமுறைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனிதநேயத்தைக் கேள்விக்குள்ளாக்குவதைக் காணலாம். இந்து மதம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் எல்லாத் தளங்களிலும் பெண் வன்முறைகளை எதிர்கொள்கிறாள். உதாரணமாக மதத்தின் பெயரால் சாதிய ஒடுக்குமுறைகள், பால்நிலை ரீதியான ஒடுக்குமுறைகள் எனப் பல நடந்தேறிவருகின்றன. இதில் பெண்களும் பாலினப்புதுமையினரும் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. மதம் மற்றும் கலாசாரத்தின் பெயரால் வாழவிடாமல் செய்வதாகத்தான் இந்த நடைமுறைகள் காணப்படுகின்றன.

இந்து மதம் பிறப்பால் அனைவரும் சமம் என்பதை ஏற்க மறுக்கிறது என்கிறார் அம்பேத்கர். மதம் ஒரு அபின் என்கிறார் மார்க்ஸ். பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு அடிப்படையாக மதங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்து மத நடைமுறைகளால் ஒரு பெண் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறுபட்ட வன்முறைகளை எதிர்கொள்கிறாள்.

பெண் குழந்தை பிறந்து ஒரு மாதமளவில் இடம்பெறும் காதணி விழாவை பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான ஒரு வடிவமாகக் கொள்ளலாம். இது சுயமாகச் சிந்திக்க முடியாத குழந்தையின் மீதான ஒரு கலாசாரத் திணிப்பாகத் தான் பார்க்க முடியும். கட்டாயத்தின் பேரில் மூக்குத்தி அணியத் துhண்டுதலும் இவ்வாறான ஒரு வன்முறையே.

தமிழ்ப் பெண் குழந்தைகளைச் சிறுவயது முதல் பூ, பொட்டு இடுவதற்குப் பழக்கப்படுத்தும் சமூகம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதனைப் பெண்கள் மீது திணிக்கின்றது. பூ மற்றும் பொட்டிடுதல் பெண்களின் தெரிவாக இருக்கவேண்டும். மாறாக பொட்டு இடுதல் முகலட்சணத்துக்கு உரியது எனச் சொல்லிக்கொள்ளும் அதே சமூகம் கணவனை இழந்த பெண் பொட்டிடுவதை எதிர்க்கிறது. அதையும் மீறிப் பொட்டு இடும் கணவனை இழந்த பெண்களை மதத்தின் பெயரால் மிக மோசமாக விமர்சிக்கின்றது. கணவனை இழந்த பெண்களை தாம் மங்கலகரமான விழாக்கள் என அழைக்கும் விழாக்களில் அமங்கலம் எனக்கூறி ஒதுக்குகிறார்கள் அல்லது முன்னிலைப்படுத்துவதில்லை. கணவனை இழந்த பெண்கள் தமது பிள்ளைகளின் திருமண விழாக்களிலேயே “விதவை” எனக் குறிப்பிட்டு ஒதுக்குதல் எமது சமூகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறும் ஒரு விடயமாக இருக்கிறது.

பூப்புனிதநீராட்டு விழா அல்லது சாமத்தியச்சடங்கு எனச் சொல்லப்படுகின்ற நடைமுறைகள் பெண்ணின் முதல் மாதவிடாய்க்குப் பின் இடம்பெறுவதாகும். இது எங்களுடைய பெண் திருமணத்திற்குத் தயாராகிவிட்டாள் எனச் சொல்லுவதற்காக ஏற்பாடு செய்யப்படும் இவ்வாறான சடங்குகள் பெண்ணை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன. முதல் மாதவிடாய் வந்துவிட்டதை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் கொண்டாடும் இதே சமூகம் தான், மாதாந்தம் வரும் மாதவிடாயை வெளியில் சொல்ல வெட்கப்பட வேண்டும் என்பது போன்றதான ஒரு மாயையை உருவாக்கி விடுகின்றது. நப்கின்ஸ் அதாவது மாதவிடாய் துவாய்களைக் கடையில் வாங்கும் போது யாருக்கும் தெரியாதவண்ணம் பத்திரிகையில் சுற்றி வழங்கும் செயற்பாடு இதற்குச் சிறந்த உதாரணம். மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுதல், பூஜை அறைக்குள் அனுமதிக்காமை, கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்காமை, தீட்டு அல்லது தூய்மையின்மை எனக் குறிப்பிடல் போன்றவற்றை வன்முறையின் இன்னொரு வடிவமாகப் பார்க்கலாம்.

நேபாளத்தில் மாதவிடாய்க் காலத்தில் தனியான குடிசைகளில் தங்க வைக்கப்பட்ட பெண்கள் மரணித்த சம்பவங்கள் பலவற்றை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இந்து மதத்துடன் தொடர்புடைய இந்த பழங்கால நம்பிக்கைகள் மாதவிடாய்க் காலத்தில் பெண்களை அசுத்தமானவர்களாகச் சித்திரிக்கின்றன. இது இயற்கையான விடயம் என ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற இந்தச் சமூக நடைமுறைகள் பெண்களுக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இந்து மதத்தைப் பின்பற்றுகின்ற பெரும்பாலான நாடுகளில் இது போன்ற மதரீதியான மற்றும் கலாசார ரீதியான வன்முறைகள் அதிகம் இடம்பெறுகின்றன.

பாரம்பரிய இந்து முறைப்படியான திருமண நடைமுறைகளும் கன்னிகா தானம் போன்ற சடங்குகளும் பெண்ணை ஒரு பொருளாகவே உருவகிப்பதனைக் காணலாம். கொலுசு, மெட்டி மற்றும் தாலி அணிதலும் சீதன நடைமுறைகளும் பெண்களுக்கெதிராகக் கையாழப்படும் வன்முறைகள் தான். பெண்ணுக்கான பெரும்பாலான சடங்குகள் உடல் சார்ந்தும் பாலியல் சார்ந்தும் அமைந்திருக்கின்றன. பெண் மறுமணம் செய்வதனையும் இந்தச் சமூகம் எதிர்கிறது.

“பின் தூங்கி முன் எழுவாள் பெண்” மற்றும் குடும்பப்பெண் போன்ற பதங்கள் இந்தச் சமூகத்தில் பெண்ணை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதகம் பார்த்தல் மற்றும் மத ரீதியான மூடநம்பிக்கைகள்; போலிச்சடங்குகள் ஊடாகவும் பல சந்தர்ப்பங்களில் பெண் இழிவுபடுத்தப்படுகின்றாள். ராசி இல்லாதவள், ஜாதகம் சரியில்லை என இந்த சமூகம் பெண்ணை மாத்திரமே குற்றஞ்சாட்டுகிறது. இந்து மதத்தில் பின்பற்றப்படுகின்ற சாதியம் கூட அதிகளவில் பெண்கள் மீதே பிரயோகிக்கப்படுகின்றது.

கன்னிப் பெண், மலடி, முதிர்கன்னி, விதவை, அமங்கலம், மானம், புனிதம், தீட்டு, நாணம், கற்பு போன்ற பதங்களைப் பெண்களுக்கு உரியதாகப் பேசும் இந்த சமூகம் இதன் மூலம் எதை வலியுறுத்துகின்றது. பெண்களை அடக்குமுறைக்குள் உள்வாங்கும் ஒரு வடிவமே இதுவாகும்.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண்டாகப் பெறின்”

என்கிறது திருக்குறள்.

இதில் கூறப்பட்டதன்படி பெண் இருக்க வேண்டும் என்கிறது. இதனை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் சமூகத்தில் எப்படிப் பெண்ணுரிமை சாத்தியம்?

இந்து மற்றும் தமிழ்க் கலாசாரத்தில் ஆண்கள் தான் எல்லா விடயங்களுக்கும் தலைமை தாங்குவதற்கு முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள். பொது விழாக்களில் முதல் பந்தியில் உணவு உண்ணுவதற்கான வாய்ப்பு ஆண்களுக்கே உரியதாகப் பார்க்கப்படுகிறது. சமயத் தலைவர்களாகவே பூசாரிகளாகவோ இந்துமதம் பெண்களை அங்கீகரிப்பது மிகக் குறைவு. அது மட்டுமல்லாமல் பெண்ணை உடமையாகவும் போகப்பொருளாகவும் தான் இந்தச் சமூகம் பார்க்கிறது.

இந்து மத நூலான மனுதர்ம சாஸ்திரம், உலகப் பொதுமறையாகக் கொள்ளப்படும் திருக்குறள் போன்றவை கூட பெண்ணுக்கான சமத்துவத்தை வழங்கத் தவறிவிட்டன. அதுமட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய நூல்களும் பெண்ணின் கற்பு, அழகு, மென்மை மற்றும் பாலியல் பொருளாக வர்ணித்தல் போன்றவற்றைப் பேசுபொருளாக வைத்துப் பெண்ணை அடிமைப்படுத்துவனவாகவே இருக்கின்றன.  இன்றில்லாத போதும் ஆரம்ப காலங்களில் இந்து மத வழக்கத்தில் இருந்த உடன்கட்டையேறுதல், பால்ய விவாகம் போன்றன மிக மோசமான வன்முறைகள் ஆகும்.

இவ்வாறான மதம் மற்றும் கலாசார ரீதியான வன்முறைகள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தான் இருக்கின்றன. நடை, உடை, பாவனைகளைச் சமூகத்திற்குப் பயந்து மேற்கொள்ளும் பெண்கள் அதிகம். தமக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் வன்முறைகள் குறித்த புரிதல் இன்றி அவை வன்முறைகள் என்று தெரியாமலே பல பெண்கள் இருக்கிறார்கள்.

பல படித்த சமூகத்தில் உயர் பதவிகளில் இருக்கும் பெண்கள் தாம் சார்ந்த மதமும் சமூகமும் சொல்வதை ஏற்று அதனைப் பின்பற்ற விரும்புவதாகச் சொல்கிறார்கள். “ஊரோடு ஒத்து வாழ வேண்டும்” என்பது பல பெண்களின் கருத்தாக இருக்கிறது.

சமூகத்தில் உள்ள பெரும்பாலான இந்து மதம் மற்றும் தமிழ் கலாசாரம் சார்ந்த நடைமுறைகளைப் பிற்போக்குத்தனம் எனக் கருதும் பெண்கள் கூட அதைச் சமூகத்திற்காக சமூகத்தின் வசைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்பற்றுவதாகக் குறிப்பிடுகிறார்கள். தாம் தமக்காக வாழ முற்பட்டால் தமது எதிர்கால வாழ்க்கை மற்றும் திருமணம் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து பெண்களுக்கெதிரான சமய, கலாசார ரீதியான வன்முறைகளை எதிர்த்துக்கொண்டு தமக்காக வாழும் பெண்கள் இல்லாமல் இல்லை. மிகக் குறைந்தளவிலான பெண்களே தாம் தனித்துவத்துடன் தமக்குப் பிடித்தமாதிரியாக வாழ்வதாகவும் தமக்கெதிரான வன்முறைகளையும் கலாசாரத் திணிப்பையும் எதிர்ப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

அறிவுடன் தொடர்புபடாத இந்துமத நடைமுறைகள் மாற்றமடையவேண்டும். பெண் விடுதலையையோ, சமத்துவத்தையோ, சுயமரியாதையையோ ஏற்றுக்கொள்ளாத மதம் எப்படி சமூக மாற்றத்தையும் ஆக்க பூர்வமான சமுதாயத்தையும் கட்டியெழுப்பும். இந்துமதம் சமத்துவத்தைப் பேணும் வகையிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடாத வகையிலும் சீர்திருத்தப்படவேண்டும். பெண்கள் தமக்கெதிரான கலாசார ரீதியான வன்முறைகள் தொடர்பில் விழிப்புடன் இருத்தல் அவசியம். பெண்களுக்கெதிரான சமய, சமூக, கலாசார ரீதியான வன்முறைகள் தொடர்பில் சமூகத்தில் தெளிவு ஏற்படுத்தப்படுதல் அவசியம்.

anu அனுதர்ஷி லிங்கநாதன், யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவர் 2014ஆம் ஆண்டில் இருந்து எழுத்தாளராகவும் பணிபுரிகிறார். இவர் பால்நிலை கல்வி மற்றும் பத்திரிகைத்துறை போன்றவற்றை பற்றி கற்பிப்பதில் விசேட ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது.

Social Share: