அவர்களது உலகை அழகாக்குவோம்

அந்த பதினைந்து சிறுவர்களையும் கவனமாக வீடுவரை அழைத்து செல்லும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது, அனைவரும் பத்து தொடக்கம் பதிமூன்று வயது வரையானவர்கள், கிராமத்து சிறுவர்கள் என்பதால், வெளி உலகம் பற்றிய, பொதுப் போக்குவரத்து சாதனங்கள் பற்றிய அறிவோ, பயணித்த அனுபவமோ இல்லை அவர்களிடம், இந்தக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு அனைவருக்கும் ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தேன்.

நானும் தம்பியும் அருகருகே நின்று கொண்டு பயணித்தோம், ஐந்து நாட்கள் வீட்டைப் பிரிந்து இருந்து விட்டு மீண்டும் வீட்டைக் காணும் ஆவலில் அனைவரும். சிறிது தூரம் தான் சென்று இருப்போம், கடும் களைப்போடு இருந்த நான் தம்பியின் தோலில் சாய்ந்து கொண்டு தூங்கினேன்.

தம்பி என்னைத் தட்டி அவனைக் காட்டினான், அவனது அடையாளம் கூறுவது இங்கு பொறுத்தம் இல்லை, பிரதேசத்தின் ஒரு முக்கிய புள்ளியின் செல்லப் பிள்ளை அவன். அவன் அடிக்கடி என்னைப் பார்த்து எதையோ உணர்த்திக் கொண்டிருப்பது தெரிந்தது, ஏதோ அசௌகரியத்தில் அவன் இருப்பதை தான் அவன் எனக்கு உணர்த்துவதை புரிந்து கொண்டேன். ஏன் என்று இரு ஆசனங்கள் முன்னால் சென்று அவனைப் பார்த்தேன். அவன் அசௌகரியத்தில் வளைந்து நெளிவதும், அப்பாவித் தனமாக என்னைப் பார்ப்பதுமாக இருந்தான்,  நான் மீண்டும் அவனைப் பார்க்க அப்போது தான் அவதானித்தேன் அதனை, அவனுக்கு பக்கத்தில் இருந்த எனது தாத்தாவின் வயதை ஒத்த ஆசாமியின் கை அவனது தொடையை வருடிக் கொண்டு இருப்பதை.

அந்தக் கை மேலே ஏறி அவனது அந்தரங்கத்தை அடைவதை அவதானித்தேன்.

சிறுவனோ மிகவும் பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்பட்டவன், மைதானத்தில் கூட அவனைக் கண்டதில்லை, பொதுவான சராசரி கிராமத்து சிறுவர்களைப் போல் ஓடியாடி பழக்கம் இல்லாதவன், என் மேல் இருக்கின்ற ஒரே நம்பிக்கையில் என்னுடன் அவனது தந்தை அவனை அனுப்பி வைத்தார்.

அங்கு என்ன நடக்கின்றது என்பதை அறியும் பக்குவம் அவனுக்கு இருக்கவில்லை, ஆனாலும் அங்கு நடப்பதை அவன் விரும்பவில்லை என்பதும் அதனை எதிர்க்கத் தெரியாது அந்த இக்கட்டிலிருந்து மீள முடியாது தவித்துக் கொண்டு உள்ளான் என்பதும் புரிந்தது.

நானும் அப்போது தான் உலகை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண்டு சமூக நீரோட்டத்தினுள் சங்கமிக்கும் பருவத்தில் இருந்தேன்.  அந்த சூழலில் எத்தகைய முடிவை எடுப்பது என்பதை நானும் அறிந்து இருக்கவில்லை, அந்தக் கயவனிடமிருந்து அந்த பிஞ்சு மனதை பாதுகாக்கும் கடப்பாட்டில் இருந்தேன். அந்த மிருகமோ எதையும் பார்க்காது காரியமே கண்ணாக நித்திரையில் போல் சாய்ந்து கொண்டிருந்தான். இன்னும் சிறு தூரம் தான் தரிப்பிடத்துக்கு. ஆனாலும் அது வரை அவனை அங்கு வைப்பது அவனது எதிர் காலத்தையே தலைகீழாகத் திருப்பி போட்டு விடும் என்பதை உணர்ந்தேன்.

அவனை அழைத்து எனக்கு அருகே வைத்துக் கொண்டேன், வீடு போகும் வரை வேரு விடயமொன்றைக் கதைத்து அவன் மனதில் இருந்து அந்த வடுவை நீக்க முயற்சித்தேன், என்னால் அந்த நிலையில் வேறு என்ன தான் செய்ய முடியும்….

நாம் அறியாமலே நமது பிள்ளைகள் தம்பிகள், சகோதரர்கள், ஏதோ ஒரு விதத்தில் இன்று பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொண்டு தான் உள்ளார்கள், அப்பாவி சிறுவர்கள் அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள முடியாமல் அதிலிருந்து வெளியே வந்து கொள்ள முடியாது மன ரீதியாக,  பாரிய அழுத்தத்தை எதிர் கொள்கிறார்கள்.

இதற்கு முற்றிலும் பொறுப்புக் கூற வேண்டியது பொறுப்பாளர்களான நாமே. சில விடயங்கள் இடம் பெற்ற பின்பு அதனை பற்றி யோசிப்பது என்பது பயனற்ற விடயம், ஆனாலும் துரதிஷ்டவசமாக நாம் இன்று அதனைத் தான் செய்து கொண்டு இருக்கின்றோம், நமது அன்றாட வேலைப் பளுக்களுக்கு மத்தியில் நமது குழந்தைச் செல்வங்களை கவனிக்கத் தவறுகின்றோம்.

ஒரு பெண் குழந்தை பருவ வயதை அடைந்து கட்டிளமைக்குள் நுழையும் போது பெற்றோரால் உடலியல் மாற்றங்கள், தனது உடலின் பெறுமானம், பெறுமதி, தன்னைக் காத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூகம் மீதான அச்சம் என்பன போதிக்கப்படுகின்றன.

துரதிஷ்டவசமாக பெரும்பாலான பெற்றோரின் பொடுபோக்கு காரணமாக ஆண் பிள்ளைகள் கட்டிளமைக்குள் நுழையும் போது இவை எவையுமே போதிக்கப் படுவதில்லை. அவனது உடலியல் மாற்றங்கள், தன்னை எவ்வாறு பேணிக் கொள்ள வேண்டும், தன்னை நோக்கி எவ்வாறான சவால்கள் வரப் போகின்றன போன்றவற்றை அவனுக்கு கட்டாயம் வீட்டில் பெற்றோர் சகோதரர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது எது மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டு கொண்டிருக்கின்றோம் என்பது புரியும்.

நற்போதனைகளை போதிக்கும் நான்கு மதங்களை பின்பற்பும் மக்கள் வாழும் நாடு இது.  கடந்த வருடம் மாத்திரம் சுமார் 7400 க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையதளம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தலைநகரில் மாத்திரம் சுமார் 1050 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளது என்றும் தினமும் இத்தகைய முறைப்பாடுகள் கூடுவதே தவிர குறைவதில்லை என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் என்.பாலேந்திரா கடந்த மாதம் கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்தார்.

பரிதாபம் என்னவென்றால் துஷ்பிரயோகப் படுத்தப்படும் சிறுவர்களில் அதிகமானோர் தாம் என்ன செய்யப் படுகின்றோம் என்பதனை அறியாமலே பாலியல் ரீதியாக துன்புறுத்தப் படுகின்றார்கள். கவலை என்னவென்றால் அதனை உரியவர்களிடம் முறைப்பாடு செய்யக் கூட அவர்களுக்கு தெரியாது என்பதே. பெற்றோர் பிள்ளை உறவுகளில் அப்படி ஒரு இடைவெளி. நாமே உணராத வரையில் எதுவும் இங்கு மாறாது.

என்றோ ஒரு நாளில் இந்த உலகத்தை வழிநடாத்தவிருக்கும் தலைவர்கள் அவர்கள். அவர்களுக்கு இளம் பருவத்தில் அழகான உலகைக்காட்ட வேண்டியது நமது கடப்பாடு. அவர்களது செயற்பாடுகளை எதிர்காலத்தில் சீராக்கிக் கொள்வதற்கு வளரும் பருவத்தில் முகம் கொடுக்கும் அனுபவங்கள்  தாக்கம் செலுத்தும். அவர்களது இந்த மொட்டுப் பருவத்து கசப்பான அனுபவங்கள் எதிர்காலத்தில் அவர்களை எத்தகைய நிலையை நோக்கி இட்டுச் செல்லும் என்பதனை நினைக்கும் போது மென்னி ஆட்டம் கொள்கிறது. இது போன்ற கசப்பான அனுபவங்கள் தான் எதிர்பார்க்காத விளைவுகளாக எதிர் காலத்தில் சமூக விரோதிகளை, குற்றவாளிகளை உருவாக்குகின்றன.

இவ்வாறான அனுபவங்கள் தாம் எதிர்காலத்தில் உருவாக்கிக்கொள்ளும் உறவுகளையும் பாதிக்கலாம். இவ்வாறான சந்தர்பங்களால், சிறுவர்களுக்கு சிறுவயதிலே ‘சம்மதம்’ பற்றி தவறான எண்ணம் உருவாகிறது.  மேலும், இவ்வாறான பிரச்சனைகளை பற்றி பெற்றோர்கள் சரியான முறையில் பிள்ளைகளுடன் கலந்துரையாடாமல் போவதாலும், இந்த பிள்ளைகளின் எதிர்கால  உறவுகள் பாதிக்கப்படுகின்றன.

நமது கடமைகள் என்ன?

பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களில் இருந்து நமது சிறுவர்களை எப்படி பாதுகாப்பது?

அது போன்ற சூழ் நிலைகளை விட்டும் விலகிச் செல்ல  எவ்வாறு அவர்களை வழிகாட்டுவது?

ஒரு சிறுவர் பயிற்றுவிப்பாளன் என்றவகையில் எனது அனுபவங்களை கொண்டு, வாசிப்பைக் கொண்டு சில ஆலோசனைகள்:

  • வீட்டை விட்டு சிறுவர்கள் வெளியேறும் பருவம் வரும் போது அவர்களுக்கு உலகின் தன்மைகளை பன்பாக எடுத்துக் கூறுதல்.
  • தனது உடலின் பெறுமானம் என்ன, தனது உரிமைகள் என்ன என்பன பற்றிய அறிவை கொடுத்தல்.
  • பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பாதுகாப்பாக பயணிக்கும் அனுபவத்தை பெற்றோர் பெற்றுக் கொடுத்தல்.
  • தன்னைத் தானே காத்துக் கொள்ள தற்காப்புக் கலைகளை கற்றுக் கொடுத்தல், (குறைந்து சூழலை விட்டு நழுவி ஓடவாவது)
  • இக்கட்டான தருணங்களில் எவ்வாறு பிறரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வது என்பதை சொல்லிக் கொடுத்தல்.
  • முகம் கொடுக்கும் எந்தப் பிரச்சினையையும் முகங்கொடுக்கும் பக்குவத்தை வளர்த்தல்.
  • நல்ல தொடுகை, கெட்ட தொடுகை என்பவற்றை கற்றுக் கொடுத்தல்.
  • எந்தச் சூழ்நிலையானாலும், எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் தான் நம்பும், தனுக்கு உதவக்கூடிய ஒரு வயது வந்த நபரிடம் பிரச்சனையை பகிருவதற்கான தைரியத்தை சிறுவர்களுக்கு வழங்குதல்.

இது போன்ற சில அனுகு முறைகள் , செயற்பாடுகள் மூலமாக நமது இதயக்கொழுந்துகளை, நமது எதிர்கால வாரிசுகளை நிச்சயமாக பாதுகாத்து அவர்களது எதிர்காலத்தை வண்ணமயமாக மாற்றலாம்.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்.

குறிப்பு – இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கான தொலைபேசி உதவிச் சேவையே “1929” சிறுவர் தொலைபேசிச் சேவையாகும். “1929” தொலைபேசிச் சேவையை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வாரத்தின் எந்தவொரு தினத்திலும்இ எந்த நேரத்திலும்இ நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும்இ எந்தவொரு ரெலிகொம் சேவை வழங்குநர் ஊடாகவூம் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். 1929 ஆனது சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவற்றை சம்பந்தப்பட்ட சட்ட அமுலாக்கல் முகவராண்மைகளுக்கு ஆற்றுப்படுத்துகின்றது.

farik பாரிக் மொஹம்மத் பேராதனை பல்கலைக் கழகத்தில் வெளிவாரியாக கலைத்துறையில் கல்வி கற்கின்றார். சஞ்சிகைகள், முகநூல் என்பவற்றில் வேறு பெயர்களிலும் சொந்தப் பெயரிலும் எழுதுபவர். ஒரு சிறுவர் பயிற்றுவிப்பாளன். ஒரு வாசகன். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது

Social Share: