ஒன்லைன் க்ரூமிங் பற்றி பிள்ளைகளுடன் பேசுவோம்

ஒன்லைன் க்ரூமிங் என்பது பல கட்டிளமை பருவத்தினர் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனையாக மாறி உள்ளது. இது அவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கினாலும் இதை பற்றி அவர்கள் பெற்றோருடன் பேசுவது குறைவு. இதற்கான ஒரு முக்கிய காரணம் தயக்கம், பயம் மற்றும் இந்த விடயத்தை பற்றி பெற்றோர்கள் இடையே உள்ள அறியாமை ஆகும். இந்த வகையில் உங்கள் பிள்ளகையுடன் இதை பற்றி நீங்கள் பேசுவது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கியமாகும். உங்கள் பிள்ளையுடன் நீங்கள் கலந்துரையாட வேண்டிய சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு.

பாலியல் சார்ந்த நோக்கங்களுக்காக ஒருவருடன் நட்புறவை ஏற்படுத்தி கொண்டு, சில காலம் கழிந்த பிறகு அவர்களை தம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உபயோகிக்கும் நபர்களை க்ரூமிங்(Grooming)  என்னும் பதம் குறிக்கும்.

இவ்வாறான நபர்கள் சோஷல் மீடியா பக்கங்களிலும், விளையாட்டு இணையதளங்களிலும், சட் ரூம்(Chat room)களிலும் மற்றும் வேறு இணைய பக்கங்களிலும் தம் பலியாடுகளை தேடுவார்கள். இவர்கள் போலியான ப்ரொபைல்களையும், புகைப்படங்களையும், வயதுகளையும், பால்நிலைகளையும் பாவித்து ஆட்களை கவர முயற்சி செய்வார்கள்.

அவர்களின் இலக்குடன் நன்றாக பழகி, அந்நபரின் நம்பிக்கையை வென்ற பிறகு, இவர்கள் பாலியல் விடயங்களை பற்றி கதைக்க தொடங்க கூடும். இவர்களை பிறரை இதை பற்றி கதைக்க தூண்டுவதுடன்,பின்னர் அவர்களை நிர்வாண புகைப்படம் அல்லது வீடியோ அனுப்புமாறும் தூண்டுவர்.

இந்நபர்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பாவித்து ஒரு நபரை அச்சுறுத்தி, மிரட்டி, அவர்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவோ அல்லது/மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தவோ முடியும்.

இவ்வாறான நபர்கள் அறிமுகம் இல்லாதவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் முதலில் நட்புறவுடன் பழகியவர்களாகவும் இருக்கலாம்.

இவ்வாறு செய்பவர்கள் பின்வரும் முறைகளில் உங்கள் நம்பிக்கையை வெல்ல முயல்வார்கள்:

  • இவர் உங்கள் வயதானவர், உங்களுக்கு பிடித்த விடயங்கள் அவருக்கும் பிடிக்கும் என கூறலாம்.
  • புரிந்துணர்வுடன் நடந்து கொண்டு அறிவுரை வழங்கலாம்.
  • பரிசுகள் கொடுக்கலாம்.
  • எந்நேரமும் உங்கள் பற்றி மட்டுமே கவனம் செலுத்தலாம்.
  • அவர்களின் பதவி/வசதியை உங்கள் தேவைக்கு பாவிக்கலாம்.

எம்மில் அநேகமானோர் இணையத்தின் மூலம் பிறருடன் உரையாடுவோம். இணையம் என்பது தொடர்பாடல் செய்ய உறவுகளை மேற்கொள்ள சிறந்ததொரு இடமாகும். எனவே இணையத்தில் எமக்கு தெரியாதவர்களுடன் உரையாடும் பொழுது ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றி அறிந்திருப்பது நல்லது.

இவ்வாறான ஒரு நபர் உங்களுடன் தொடர்பொன்றை ஏற்படுத்தி கொண்டால், அவர் உங்களை பின்வரும் விடயங்களை செய்ய தூண்டலாம்:

  • இணையத்தின் மூலமோ டெக்ஸ்ட் மெசேஜ் மூலமோ பாலியல் ரிதியான செய்திகளை பரிமாறுதல்.
  • தன்னுடைய நிர்வாண படங்களை பகிர்ந்து கொள்ளுதல்.
  • தன்னுடைய நிர்வாண வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுதல்.
  • வெப்கம் கேமரா வழியாக பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
  • இந்நபரை நேரில் சந்தித்தல்.
v அருந்ததி வல்லவராயன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர் கட்டுரைகள் எழுதுவில் மற்றும் சமூக சேவையில் ஆவல் கொண்ட ஒரு இளம் யுவதி. இவர் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலை வன்முறை ஒழிப்பு பற்றி பாலியல் நாட்டம் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது.

 

Social Share: