பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்கு மூலமாக ’மீ டூ அசைவியக்கம்’ (Metoo Movment) அமைந்திருக்கின்றது. சமீபகாலமாக இந்திய திரைப்பட நடிகைகள், பின்னணிப்பாடகிகள் தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை #Metoo பதிவின் மூலம் வெளிகொண்டு வர முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவை ஒரு சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டும். ஒரு சிலரின் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கின்றது. இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தவர்களில் பின்னணிப்பாடகி, சின்மயி, நடிகை தனு ஸ்ரீ தத்தா போன்றோரின் குற்றச்சாட்டுகள் பெரிதும் பேசப்பட்டு வருபவையாக இருக்கின்றன.
இவர்களின் குற்றச்சாட்டுக்களின் மூலம் பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து, நடிகர் நானா படேகர், இயக்குநர் சஜித்கான், பாடகர் கார்த்திக், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க போன்ற பிரபலங்கள் சர்ச்சைகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த மீ டூ இயக்கத்தின் மூலம் கருத்துக்களை வெளியிட்டுள்ள பெண்களின் துணிச்சலை பெரிதும் பாராட்டி ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வரும் பலரின் மத்தியில், இவ்வாறான புகார்கள் புகழுக்காக மேற்கொள்ளப்படுவதாகவும் இவ்வளவு நாட்கள் இதை வெளிப்படுத்தாமல் தற்போது வெளிப்படுத்துவதற்கான காரணமென்ன எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவ்வாறான நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஆணைக்குழுவை நியமித்து விசாரனை மேற்கொள்ள இந்திய மத்திய மகளிர் அமைச்சு முடிவு செய்துள்ளது.
2006ஆம் ஆண்டு தரானா புர்க் என்ற மனித உரிமை ஆர்வலரினால் தொடங்கப்பட்ட ’மீடூ’ இயக்கமானது 2017ஆம் ஆண்டே பிரபலமாகத் தொடங்கியது. அமெரிக்கா நடிகை அலைஸா மிலனோ ஹொலிவுட்டுக்குள் நுழைந்த பின்னர் ஹொலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மீது 80க்கும் மேற்பட்ட நடிகைகள் பாலியல் புகார்களை மீடூ மூலம் முன்வைத்திருந்தனர். இவ்வாறு மீ டூ தொடர்பான வாதங்கள் நீண்டு செல்கின்றன. இலங்கையிலும் கூட நடிகைகள், ஊடகவியலாளர்கள், தாய்மார்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த மீ டூ தொடர்பாக முகப்புத்தகத்தில் ஆதரவுக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வில்லன் நடிகரும் நடன இயக்குனருமான கல்யாண் மீது இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருப்பதாக சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணம் மேற்கொள்ளும் 90 வீதமான பெண்கள் பாலியல் தாக்குதல் மற்றும் தொல்லைக்கு ஆளாவாதாக ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் இலங்கையில் வருடாந்தம் 2500க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் சட்டரீதியான நிவாரணங்கள் கிடைக்கின்றதென உறுதியாகக் கூறமுடியாது. இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் 90 வீதமான பெண்களில் 4 வீதமானோரே பொலிஸில் புகார் தெரிவிக்கின்றனர். ஏனையோர் அவற்றை மறைத்துவிடுகின்றனர்.
எனவே இவ்வாறான பொது இயக்கங்கள் தோன்றும் போது அவ்வாறான மறைக்கப்பட்ட விடயங்களை முன்கொண்டுவர பலரும் முனைகின்றனர் இதில் இந்தியப் பெண்கள் முன்னணியில் இருக்கின்றனர். இலங்கையில் இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தாலும் வெளிப்படையாக எவரும் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் இயக்கங்களை ஆரம்பித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இவர்கள் ஏன் சட்டரீதியாக இவற்றுக்கெதிராக போராட முன்வரவில்லை என்றதொரு கேள்வியும் முன்வருகின்றது. சமூகத்தின் மீதான பயம் இவற்றை பின்னடிப்புச் செய்வதாகவே தெரிகின்றது. அவ்வாறெனில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முடியாதளவுக்கு சட்டத்துறை பலவீனமாக இருக்கின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.
‘பாலியல் வன்முறை, லஞ்சம் போன்றன பெண் பிள்ளைகளுக்கு நடந்துவருகின்றது. அதேபோல் ஆண்களுக்கும் நடக்கின்றது. உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் நடைபெற்றாலும் பெண்களுக்குள்ள பயம் அவற்றை வெளிகொண்டு வர மறுக்கிறது. இதனை வெளிப்படுத்துவதால் அவர்களின் கல்வி, தொழில் என்பன பாதிக்கப்படும் என்பதாலும், சமூகம் அவர்களை குறைகூறும் என்பதாலும் அதிகமான பெண்கள் இவற்றை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே இவ்வாறான விடயங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக மீ டூ பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது. எனக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அது இன்றுவரையும் மறக்க முடியாத வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது. எனவே இதைப் பற்றிப் பேச வேண்டும். சமூகமும் ஆண்களும் இதைப்பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் முதலாவதாக ஆதாரம் என்ன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதற்கு எவ்வாறு ஆதாரம் முன்வைப்பது. ஆதாரம் வேண்டும் என்றால் குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்பதை ஆதாரத்துடன் நிறுவ வேண்டும். இரண்டாவதாக ஏன் இவ்வளவு காலம் வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அவர் புதிதாகத் தொழிலுக்கு சென்றவராக இருக்கலாம். சிறுவயதாக இருக்கலாம். இதனால் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கலாம்.

இந்த மீ டூ பிரசாரத்தால் பல ஆண்கள் பயப்படுகின்றனர். இந்த பயத்தின் காரணமாக பெண்களை கேவலமாகத் தாக்கிப் பேசுகின்றனர். இவ்வாறான குற்றச்சாட்டு வெளிவந்தால் நாம் பாதிக்கப்படுவோம் என்பதே அதற்குக் காரணம். இதனால் பெண்கள் தைரியமாக பிரச்சினைகளை வெளிக் கொண்டு வரவேண்டும். அத்தோடு இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இது ஆண்களுக்கு எதிரான ஒரு பிரசாரம் அல்ல. ஆண்களுக்கும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கிறது. ஒரு சில பெண்கள் ஆண்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். சில ஆண்களை ஆண்களே துஷ்பிரயோகம் செய்கிறார்கள். கௌரவம் காரணமாக இப்பிரச்சினைகளை ஆண்கள் வெளிக்கொண்டு வருவதில்லை. எனவே இது பெண்களுக்கான பிரச்சினையல்ல. மொத்தச் சமூகத்துக்கான பிரச்சினை எனப் பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான நளினி ரட்ணராஜா தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் முதல் நாள் முதல் ட்விட்டரில் # குறியீடு அரை மில்லியனுக்கும் அதிகமான தடவைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ’மீ டூ’ தொடர்பாக தமது முகப்புத்தகத்தில் கலந்துரையாடியிருந்தனர். எனவே சமூகம் மீதான பயம், ஆண்களின் கௌரவம் என்பன காரணமாக பெரும்பாலான சம்பவங்கள் வெளித்தெரியாமல் இருக்கின்றன. கருத்துரிமையின் ஒரு பகுதியே ’மீ டூ இயக்கம்’ என்பது பொதுவாக பெண்களின் கருத்தாக இருக்கின்றது.
“பாதிக்கப்பட்ட பெண்கள் இவ்வாறு வெளிப்படையாகத் தெரிவிப்பது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் பொதுவாக பெண்களுக்கு நடக்கும் இவ்வாறான தொல்லைகளை அவர்கள் வெளியில் பேசமாட்டார்கள் பயப்படுவார்கள் என்ற எண்ணத்திலேயே பலரும் நடத்திவருகிறார்கள். பெண்கள் நேரடியாகவோ வெளிப்படையாகவோ பேசத் தொடங்கிவிட்டால் பிற்காலத்தில் சினிமா மற்றும் ஊடகத்துறையில் பிரவேசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளின் முகத்திரையை கிழிப்பது வரவேற்கத்தக்க விடயம்.

ஒரு பெண் என்றும் தனது தன்மானத்தை விற்று புகழ் தேடிக்கொள்ளமாட்டாள். எந்த ஆண் இவ்வாறு கூறுகிறாரோ அது தன்னுடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பெண்களையும் அவமானப்படுத்துவதற்கு சமம். தாய், சகோதரி, மனைவி என ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையுடனும் இவர்கள் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கின்றனர். தன்னுடைய குடும்பத்தில் ஒரு பெண் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தால் அவர்களையும் ஒரு சில ஆண்கள் ஏளனமாகவே பேசுவார்கள். பயத்தால் தான் ஒரு சில “ஆண்கள் இவ்வாறு பேசுகிறார்களோ என்று நான் நினைக்கின்றேன்.’
நானும் ஊடகத்துறையில் இவ்வாறானதொரு பிரச்சினைக்கு முகம்கொடுத்திருக்கின்றேன். எனக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டு அதனை நான் எதிர்த்து இறுதியில் என்னுடைய நிகழ்ச்சியிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. அதனால் இலங்கையில் இவ்வாறு பாலியல் தொல்லைகள் இல்லையென்று கூற முடியாது. ஆனால் அவை பெரிதாக வெளிவருவதில்லை. இவ்விடயத்தில் எனக்கு ஆதரவு தந்தது பெண்களே ஆனால் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் ஒரு சில ஆண்கள் இவ்விடயத்தை பெரிதுப்படுத்தியிருக்க கூடாது என்றே என்னிடம் தெரிவித்திருந்தனர்.’ என நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நடிகையுமான நிரஞ்சனி சண்முகராஜா தெரிவித்திருந்தார்.
இவ்வாறு பல்வேறு விமர்சனங்களை வெளியில் கொண்டுவந்துள்ள மீ டூ விவகாரமானது பல உண்மைகளையும் அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளது என்பதை நாம் மறுக்கவும் முடியாது. ஆனால் இவ்வாறு தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் விபரங்களை வெளியிடும் பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா? அல்லது அவர்களுக்கு சட்டரீதியான நிவாரணங்கள் கிடைக்கப்பெறுமா என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டியுள்ளது.
“மீ டூ னா என்ன? என்ன பிரச்சினை? நீ பாத்தியா? கேள்விபட்ட தற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. இதற்கான ஆதாரத்தைக் காட்டினால் நான் பதில் சொல்கிறேன்.” என இயக்குனர் இமயம் பாரதிராஜா இலங்கையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் இந்த ’மீ டூ’ இயக்கத்துக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கவே செய்கின்றது. அதேபோல சில ஆண்களிடமிருந்து எதிர்ப்புகளும் வலுக்கவே செய்கின்றது. இந்த எதிர்ப்புகளுக்கு இரண்டே காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன 1. இவ்வளவு காலம் ஏன் இதனை வெளிப்படுத்தவில்லை. 2. புகழுக்காகவே புகழ் பெற்றவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. என்பதே அவையாகும். பாலியல் தொல்லை தொடர்பாக வெளியே தெரிவிக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் பிரபலங்களாகவே இருக்கின்றனர். சாமானியர்களின் குரல்கள் இன்னும் ஓங்கி ஒலிக்கவில்லை. அவ்வாறு ஒலிக்கும்பட்சத்தில் இவற்றிக்குத் தெளிவான விடை பகரலாம். அதைவிடவும் தைரியமானவர்கள் சட்ட உதவியினை நாடலாம்.
இந்த ’மீ டூ’ விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ’ மீ டூ’ என்ற இயக்கமும் எழுச்சி பெற்றிருக்கிறது. அதாவது பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இணைந்து உருவாக்கியுள்ள இயக்கமாகும். தற்போதுவரை மகாராஷ்ர மாநிலத்தில் பெண்ணால் பாலியல் தொல்லைக்கு ஆளான ஆணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இனி பல குற்றச்சாட்டுக்கள் வெளிவருமென எதிர்பார்க்கலாம். அதே வேளை அக்குற்றச் சாட்டுக்களுக்கெல்லாம் சட்ட நிவாரணங்களும் கிடைக்கப்பெறவேண்டுமென இதன் மூலம் வலியுறுத்தலாம்.
“பெண்கள் தொடர்பான பாலியல் குற்றங்களில் சிறுவராக இருந்தால் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் கட்டாயம் வழக்கு பதிவு செய்யப்பட்டு வெளிவருகிறது. பாலியல் வன்புணர்வாகவிருந்தால் பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் பெரும்பாலும் நீதிமன்றுக்கு வழக்காக வருவதில்லை. அவை தொடர்பாக பெண்கள் முறைப்பாடு செய்வது குறைவு. இருக்கும் தண்டனைகள் சரியாக இருந்தாலும் முறைப்பாடுகளை பதிவு செய்ய பெண்கள் முன்வருவது குறைவு. சமூகமே இதற்கு பிரதான தடையாக இருக்கிறது.” என சட்டத்தரணி ரொஷா
![]() |
கருப்பையா பிரசன்னகுமார் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் முழுநேர ஊடகவியலாளராக கடமை புரிந்து கொண்டு சமூக அபிவிருத்தி தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகின்றார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது. |
