சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியிலான தண்டனைகளை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாய நிலையில் சமூகம்

‘அடியாத மாடு படியாது’,

‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்’,

‘அடிக்கின்ற கை தான் அணைக்கும்’

இவ்வாறு தமிழ் மொழியில் உள்ள  பழமொழிகளை தம் வாழ்நாளில் பயன்படுத்தாதவர்கள் என்று எவரும் இல்லை. குறிப்பாக பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கண்டிக்கின்ற போதும் தண்டிக்கின்ற போதும் இந்த பழமொழிகளைக் கூறாமல் இருந்ததும் இல்லை. பிள்ளைகளை அடிப்பதும், உடல் ரீதியிலான இதர தண்டனைகளும் எந்தவிதமான குற்ற உணர்வும் இன்றி முன்னெடுக்கப்படுகின்றன.  இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பரந்துபட்ட அளவில் சமூகத்தில் தற்போது பேசப்பட்டு பல விமர்சனங்கள்  முன்வைக்கப்படுகின்றன. ஆனால் பெற்றோர்களினாலும், கல்வியின்  பெயரால் ஆசிரியர்களினாலும் உடல் ரீதியிலான தண்டனைகளுக்குள்ளாகும் சிறுவர்கள் பற்றி இந்த சமூகம் எந்தவிதமான அக்கறையையும் காட்டுவதில்லை.

பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதற்காக என்று இவ்வாறான வன்முறைகளும், தண்டனைகளும் எமது சமூகத்தில் நியாயப்படுத்தப்படுகின்றன.  இதனால் அந்த பிஞ்சு உள்ளங்களுக்குள் ஏற்படும் வேதனைகளையும், அச்ச உணர்வினையும், உளக் குழப்பங்களையும் பற்றி எவருமே பொருட்படுத்துவதில்லை.  இதனால் பிள்ளைகளின் உரிமைகள் வெகுவாக பாதிக்கப்படுவது குறித்தும் சிந்திப்பதுமில்லை.

உளவியலாளர்களின் கருத்துப்படி சிறுபராயத்தில் இவ்வாறான தண்டனைக்குள்ளாகும் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவ்வாறான வன்முறைகளை தமது வாழ்வில் கடைப்பிடிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இன்று இலங்கையில் அதிகரித்து செல்கின்ற வன்முறைகளும், குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளும், பணி புரியும் இடங்களில் நிகழும் வன்முறைகளும்,  வீட்டு வன்முறைகளும் இதற்கு உதாரணம் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பிள்ளைகள் பெற்றோர்களிடமிருந்தும், வளர்ந்தோர்களிடமிருந்து வன்முறையை கற்றுக் கொள்கின்றனர். இதனால் சிறுவர்களுக்கு தண்டனைகள் வழங்குவதனூடாக அவர்களுக்கு தண்டனைகள், வன்முறைகள் பற்றி நாம் கற்றுக் கொடுக்கின்றோம். அது மட்டுமன்றி ஒரு தவறுக்காக சிறுவர்களுக்கு தண்டனை அளிக்கும் போது சிறுவர்கள் அதனை அந்த குறிப்பிட்ட  தவறுக்கான தண்டனையாகவே நினைக்கின்றார்கள், பின்னர் அதனை மறந்துவிடுகின்றனர். இந்நிலையில் தண்டனைகள் என்பது பிள்ளைகளைப் பொறுத்தவரை அர்த்தமற்ற விடயமாக இருப்பதுடன் அவர்களுக்கு உள உடல் தாக்கங்களை ஏற்படுத்தும் ஓர் விடயமாக மட்டுமே உள்ளது.

இந்நிலையில் இலங்கைப் பாடசாலைகளில் அதிகரித்து வருகின்ற சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியிலான தண்டனைகள் (Corporal Punishment) குறித்து சிறுவர் உரிமைகள் தொடர்பாக பணியாற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளன. இலங்கை 1991ம் ஆண்டு ஐக்கிய நாடுகளில் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு அந்த சட்டத் திட்டங்களை அங்கீகரித்து செயற்படுவதாக உறுதியளித்துள்ளது. அதில் பிள்ளைகளுக்கு உடல் ரீதியாக தண்டனை வழங்குவதனை நிறுத்த எதுவும் செய்ய முடியவில்லை என்று கலாநிதி ஹிரந்தி விஜேமான்ன தெரிவித்தார். அதேவேளை இலங்கையில் சிறுவர் உரிமைகளை மேம்படுத்த கடந்த 40 ஆண்டு காலமாக முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் வெற்றி பெறவில்லை என்றும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சிறுவர்களுக்கு எதிராக உடல் ரீதியிலான தண்டனைகளை தடுப்பது  தொடர்பிலான இலங்கை அரசின் அக்கறையற்ற செயற்பாடுகள்  காரணமாக  ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் தொடர்பான அமைப்பு எமது நாட்டுக்கு சிவப்பு எச்சரிக்கையினை கடந்த பெப்ரவரி மாதம் விடுத்திருந்தது.

உடல் ரீதியிலான தண்டனைகள்

சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியிலான தண்டனைகளில் அடித்தல் (சப்புதல், கன்னத்தில் அறைதல், பிரம்பால் அடித்தல், கைகளால் அடித்தல்),  உதைத்தல், உடலைப் பிடித்து குலுக்குதல், தள்ளுதல், சுரண்டுதல், கிள்ளுதல், கடித்தல், காதை திருகுதல், தலைமுடியைப் பிடித்து இழுத்தல், கௌரவமற்ற இடங்களில், அசௌகரியமான இடங்களில் பிள்ளைகளை இருக்குமாறு பலவந்தப்படுத்தல், ஒற்றைக் காலில் நிற்க சொல்லுதல், முழங்காலில் இருக்க செய்தல், அளவுக்கு அதிகமாக உடலை வருத்தி வேலை செய்ய பணித்தல், சுடுதல், சூடான பொருட்களை வற்புறுத்தி அருந்துமாறு கட்டாயப்படுத்தல் என்பன உள்ளடங்குகின்றன.

உடல் ரீதியிலான தண்டனைகள் சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்ற போதிலும் இலங்கையில் பாடசாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட இலங்கை பாடசாலைகளில் சிறுவர் ஒழுக்க நடைமுறைகள் பற்றிய ஆய்வறிக்கையில், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 80.4 சதவீதமான மாணவர்கள் உடல் ரீதியிலான தண்டனைகளை ஆகக் குறைந்தது ஒரு தடவையாவது பெற்றுள்ளனர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஆய்வினை பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா தலைமையிலான குழு மேற்கொண்டிருந்தது. குச்சி, பிரம்பு, பலகைத் துண்டு ஆகியவற்றைப் பரவலாகப் பயன்படுத்துகின்ற ஆசிரியர்கள் அவற்றைப் பயன்படுத்தி  உள்ளங்கைகளில் அடிப்பதனையே பெரும்பாலும் செய்கின்றனர். அல்லது உடலின் பின்புறம், கால்களில் அடிக்கின்றனர் என்று அந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்படுகின்றது. மேலும் தலையில் அடித்தல், சுவற்றை நோக்கி தள்ளி விடுதல், காதைப் பிடித்து தூக்குதல், உதைத்தல்  என்பன பற்றிய தரவுகளும் பதிவாகியுள்ளன. மேலும் முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த அதிபர்கள் மிகச் சிறிய தவறுகளுக்காக கடுமையான உடல் ரீதியிலான தண்டனைகளை மாணவர்களுக்கு விதிக்கின்றனர் என்றும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

வீட்டுப் பாடங்களை பூர்த்தி செய்யாமை, சீருடைகளை ஒழுங்காக அணிந்து வராமை மற்றும் காதல் தொடர்புகள் ஆகிய மூன்று விடயங்களும் மாணவர்களுக்கு எதிரான உடல் ரீதியிலான தண்டனைகளுக்கு பிரதான காரணங்களாக உள்ளன என்று இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

சட்டத்தில் நிலவும் குறைபாடுகள்

குற்றவியல் சட்டக் கோவையில் சிறுவர்களை அடிக்க முடியாது, மனதளவிலோ உடலளவிலோ பாதிப்படைய செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை நல்லெண்ணத்தின் அடிப்படையில் தண்டித்தால் பிரச்சினை இல்லை என்று குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறாயின் நாம் எவ்வாறு சிறுவர்களுக்கு நியாயாத்தினை நிலைநாட்டுவது? என்று கலாநிதி துஷ் விக்கிரமநாயக்க கேள்வி எழுப்புகின்றார். 2020ல் சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியிலான தண்டனைகளை ஒழிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து செல்லும் இவர் இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உடல் ரீதியிலான தண்டனைகள் சட்ட ரீதியில் தடுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

இலங்கை 2030ம் ஆண்டில் அபிவிருத்தி இலக்கை அடையும் நோக்கில் பயணித்து கொண்டிருக்கின்றது. ஆனால் சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியிலான தண்டனைகளை நாட்டிலிருந்து ஒழிக்காத வரை இந்த இலக்கை இலங்கை அடைய முடியாது என்றும் துஷ் விக்கிரமநாயக்க குறிப்பிட்டார். இதனைக் கருத்திற்கொண்டு 5 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றினை ஜனாதிபதியிடம் எதிர்வரும் சிறுவர் தினமான ஒக்டோபர் 1ம் திகதி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாடசாலைகளில் சிறுவர்களுக்கு எதிராக உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படும் சம்பவங்களும், அதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வேதனைகளும் குறித்து ஆங்காங்கே செய்திகள் வெளி வந்த போதிலும் தண்டனை வழங்கிய ஆசிரியர்களோ, அதிபர்களோ இதுவரை தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அமைதியாக வேதனையுடன் அவற்றைக் கடந்து செல்கின்றனர். அண்மையில் கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றை சேர்ந்த 9 வயது மாணவி அவரது சங்கீத ஆசிரியரினால் இசைக் கருவி ஒன்றினால் தாக்கப்பட்டு நரம்பு பாதிப்புக்குள்ளானார். அதேபோன்று 11 வயதான சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி பல மணி நேரம் முழங்காலில் அமர வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதனால் உடல் பாதிப்பினை எதிர்கொண்டார். இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெறுகின்ற போதிலும் இவற்றை பற்றி பரவலாகப் பேச எவரும் விரும்புவதில்லை. இவ்வாறான விடயங்களை பெரிதுப்படுத்துவதனால் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். எனவே கல்வியின் பெயரால் நாம் இந்த கொடுமைகளை மௌனமாக அங்கீகரிக்கின்றோம் என்றே கூற வேண்டியுள்ளது.

சர்வதேசப் பாடசாலைகளிலும் இவ்வாறான பல சம்பவங்கள் பற்றி அறியக் கிடைக்கின்றன. இதனால் சர்வதேசப் பாடசாலைகள் அனைத்தையும் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. முதலீட்டுச் சபையில் முதலீட்டாளர்களாக அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், கல்வி அமைச்சு அனுப்பும் சுற்றுநிருபங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்றும் முறைப்பாடுகள்  உள்ளன.

சிந்தனை மாற்றம்

கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளை உடைய பிள்ளைகளை கட்டுப்படுத்துவதற்கு அடிப்பதனை தவிர வேறு வழிகள் இல்லை என்றும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் எங்களை அடித்து வளர்த்ததனால் தான் நாங்கள் வாழ்வில் நல்ல நிலையில் இருக்கின்றோம் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான தண்டனைகளை வழங்கி எம்மை விட பலவீனமானவர்களை அடிபணிய செய்வதன் மூலம் அடைகின்ற குரூர திருப்தியே இந்த தண்டனைகளுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக அமைகின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் இந்த அடிப்படையிலேயே நாம் எடுத்துக்கொள்ள முடியும்.

அதேநேரம் அடிக்காமல், உடல் ரீதியிலான தண்டனைகளை வழங்காமல் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் நுட்பங்கள், உபாயங்கள் பற்றிய அறியாமை சமூகத்தில் காணப்படுகின்றது. மேற்கத்தேய நாடுகளில் இவ்வாறான பல நடைமுறைகள் உள்ளன. பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குதல், நட்சத்திர குறியீட்டின் மூலம் அவர்களை மதிப்பிடல், ஊக்குவித்தல் என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் வன்முறையில் ஊறிப் போயுள்ள இலங்கை சமூகத்தில் இவ்வாறான விடயங்களை பயிற்றுவித்து பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது சற்று கடினமான பணியாக இருக்கும். ஏனெனில் சிறுவர்களை அடிக்காதீர்கள் என்று திரும்ப திரும்ப கூறப்படுகின்றதே ஒழிய அவர்களை அடிக்காமல் நல்வழிப்படுத்த உள்ள நடைமுறைகள் பற்றி பரவலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தான் இறுக்கமான சட்டங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் மூலம் அனைத்து சிறுவர்களுக்கும் தேசிய அளவில் பாதுகாப்பு கிடைக்க வழி செய்யலாம் என்பதே சிறுவர் உரிமைகளை வலியுறுத்துவோரின் கருத்தாக உள்ளது. ஆனால் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் இந்த கொள்கைக்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள ஒரு சதம் கூட செலவாகாத நிலையில் அரசாங்கத்தின் அக்கறையின்மையே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இதேவேளை பிள்ளைகளை அடிக்காதீர்கள், உடல் ரீதியிலான தண்டனைகளை வழங்காதீர்கள் என்று கூறுவது மேற்கத்தேய கலாசாரத்தினை திணிக்கும் செயல் என்றும், எங்களது கலாசாரத்தில் இவ்வாறான விடயங்களை அனுமதிக்க முடியாது என்றும் பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டு  தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மருத்துவ உளவியல் துறை பேராசிரியர் பிரியான்ஜலி டி செய்சா பின்வருமாறு தெரிவித்தார். “தண்டனைகள் வழங்குவது  எமது கலாசாரம் அல்ல. ஒல்லாந்தர், போர்த்துகேயர், பிரித்தானிய நாட்டவர்கள் எமது நாட்டிற்கு வந்து எம்மை ஆக்கிரமித்த பின்னர் அவர்கள் கொண்டு வந்த நடைமுறைகள் தான் இவை.  நாங்கள் அண்மையில் செய்த ஆய்வு ஒன்றில் 12ம் 13ம் நூற்றாண்டுகளில் பொலனறுவை மற்றும் அனுராதபுரம் காலப்பகுதியில் உபபிலாஹரத திஸ்ஸ, இரண்டாவது விஜயபாகு, மூன்றாவது விஜயபாகு ஆகிய மூன்று அரசர்கள் இருந்தனர். அவர்கள் பற்றிய கல்வெட்டுக்களில் சிறுவர்களுக்கும், வயது வந்தோர்களுக்கும் எந்தவிதமான தண்டனைகளும் வழங்கப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் சிறுவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகளை வழங்குவது எமது கலாசாரம் அல்ல.  மேற்கத்தேய  நாடுகள் பிற்போக்குத் தனம் வாய்ந்த பழங்கால நடைமுறைகளை தூக்கியெறிந்து விட்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் இவற்றை  மிகவும் விருப்பத்துடன் கண்மூடித்தனமாக பாதுகாத்து வருகின்றோம்” என்றார்.

Webp.net-resizeimage (68) பிரியதர்ஷினி சிவராஜா கடந்த 10 ஆண்டுகளாக எழுத்தாளராக பணி புரிந்து வருகிறார். இவர் வீரகேசரி பத்திரிகையில் பாராளுமன்ற நிருபராகவும் பணியாற்றி உள்ளார். இவர் பால்நிலை மற்றும் மனித உரிமைகள் போன்ற தலைப்புகளில் விசேட ஆர்வம் கொண்டு உள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது.

Social Share: