சக மனிதர்களை போன்று பாரபட்சம் அற்ற வாழ்க்கையை வாழ விரும்புகின்றோம் – அதற்கான சட்ட பாதுகாப்பினை வழங்குங்கள்!

டென்வர், ஜேக், பூமி ஆகியோர் எதிர்ப்பால் கவர்ச்சி அற்றவர்கள்  மற்றும் தமது பிறப்பின் போது நிர்ணயிக்கப்பட்ட பாலினைக் கொண்டிராதவர்கள். பிறப்பில் கிட்டிய பால் அடையாளத்தினை விட வேறுப்பட்ட பாலினமாக தம்மை தாம் புது விதமாக உணர்ந்து கொண்ட நிலையை இரண்டாம் பிறப்பு அல்லது மறு பிறப்பு என்று விபரிக்கும் இவர்கள்; மூவரும் சமூகத்தில்  ஆண் பெண்  என்ற இருமை நிலைமைக்கு  அப்பாலான மாற்று அடையாளங்களைக் கொண்டவர்கள்.

டென்வரும், ஜேக் மற்றும் பூமியும்   சமூகத்தில் வாழும் ஏனைய பிரஜைகளைப்  போன்ற  சம உரிமைகள் தமக்கும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். குறிப்பாக பாரபட்சம் மற்றும் களங்கம் அற்ற இயல்பான வாழ்க்கையையே நாங்கள் வாழ   விரும்புகின்றோம் என்று அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். LGBT சமூகத்தினரின் உரிமைகளுக்காக டென்வர், ஜேக், பூமி மற்றும் ரொஷான் ஆகியோர் பல்வேறு காத்திரமான செயற்பாடுகளையும் உதவிகளையும் ஆற்றி வருகின்றனர்.

LGBT என்று பொதுவான குறியீட்டு சொல்லினால் அறியப்படும் பெண் சமபாலுறவினர், ஆண் சமபாலுறவினர், இருபாலுறவினர், திருநங்கைகள் மற்றும் இடைப்பட்ட இலங்கையர்களின் உரிமைகளை வலியுறுத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களைக் களைவது  என்பது  தற்போது உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் சார்ந்த மட்டங்களின் பேசுபொருளாக உள்ளது எனலாம்.  இலங்கையிலும் தற்போது LGBTயினரின் உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பாரபட்சங்கள் குறித்தும் பேசப்பட்டு வரும் நிலையில் LGBTயினர் எதிர்கொள்ளும் பாரபட்சங்கள், வன்முறைகள் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களை அணுகிய போது அவர்கள் தாம் எதிர்நோக்கும் சமூக அவலங்களையும், சட்டத்தின் பாதுகாப்பற்ற நிலையையும், பாலியல் துன்புறுத்தல்களையும், அவமானங்களையும் மிகவும் உணர்வுபூர்வமாக தயக்கமின்றி வெளிப்படையாக முன்வைத்து பேச ஆரம்பித்தனர்.

“என்னுடைய பாலியல்பு மற்றும் பால்நிலை அடையாளத்தினை மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று நான் அஞ்சுகின்றேன். அதனால்  பாதுகாப்பற்ற ஒருவித உணர்வுடன் நான் வாழ வேண்டிய நிர்ப்பந்தமான ஓர் நிலை ஏற்பட்டுள்ளது.” -டென்வேர்

நமது அன்றாட வாழ்வில் எங்கேயாவது ஓரிடத்தில் நாம் இவர்களை அடையாளம் கண்டு கடந்து போகின்றோம். மிகச் சிலருக்கு அவர்கள் மீது அனுதாப பார்வை இருக்கின்றது. பலருக்கு அவர்கள் தொடர்பில் ஏளனப் பார்வையும், பெரும்பாலானவர்களுக்கு அவர்கள்  தொடர்பில் விரசமான பார்வையும் இருக்கின்றது. ஆனால் இலங்கையில்  காணப்படும் பாலியல் பழமைவாதப் போக்கின் காரணமாகவும் அதன் பிரதிபலிப்பான ஆண் பெண் என்ற இரட்டை கட்டமைப்பு ஊடான பால்நிலை வகிபாகமும் இருமை குறியீடும் இவ்வாறானவர்களை சமூகம் வேறுபட்ட மனநிலையில் அணுக காரணமாக உள்ளது.”எங்களை ஏன் பாலியல் ரீதியில் மட்டும் பார்க்கின்றீர்கள். எங்கள் வீட்டு படுக்கையறை அந்தரங்கங்களை அறிய மட்டும் ஏன் இவ்வளவு  ஆர்வம் காட்டுகின்றீர்கள்” என்று ரொஷான் கேள்வி எழுப்புகின்றார்.

பிறப்பின் அடிப்படையிலான பால் கவர்ச்சி இல்லாமை என்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்றாகும். அதனால்  ஏற்படும் உடல் மாற்றங்களையும், பாலியல்பு மாற்றங்களையும் சிலர் மிக இளம் வயதிலும் இன்னும் சிலர் முதிய பருவத்திலும் உணர்கின்றனர். அந்த மாற்றத்திற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்வது என்பதும், அதனை ஏற்று வாழ்வது என்பதும் பெரும் போராட்டமாக இருக்கின்றது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தலைமறைவாகி விடவும், தமது பாலியல் வெளிப்பாடுகளையும் உறவுகளையும் மறைத்து வைப்பதற்கும், சுகாதார பராமரிப்பு போன்ற அத்தியவசிய வசதிகளை அணுக முடியாத நிலையிலும், சமூக ரீதியில் தம்மை பலவீனமாகவும் உணரவும் தள்ளப்படுகின்றனர் என்று ரொஷான் கூறுகின்றார். மிகவும் உணர்வுபூர்வமாக அவர்களின் மன வேதனைகளையும், உரிமைகளையும் பகிர்ந்த இந்த உரையாடல் பின்வருமாறு அமைந்திருந்தது.

சமபாலுறவுக்கான சட்ட அங்கீகாரம் அல்ல சம உரிமையே எங்கள்  தேவை

“LGBT சமூகத்தினர் சமபாலுறவு திருமணத்தினை வலியுறுத்துகின்றனர். அவர்கள் அதற்கான சட்ட அங்கீககாரத்தினை கோருகின்றனர்” என்று எங்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அதனை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். திருமணம் என்ற நிலையை அடைவதற்கு முன்னர் எங்களின்  பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மேற்கத்தேய நாடுகளில் சமபாலுறவாளர்கள் திருமணம் என்ற நிலையை அடைவதற்கு முன்பு அவர்கள் பல உரிமைகளை வென்றுள்ளனர். ஆனால் இலங்கையின் நிலைமை முற்றிலும் வேறுபட்டுள்ளது. நாங்கள் திருமணம் என்ற சட்ட அந்தஸ்தினைக்  கேட்கவில்லை. மாறாக பாரட்சம் இன்றி சம உரிமைகளுடன் வாழவே நாங்கள் விரும்புகின்றோம். உத்தேச புதிய அரசியலமைப்பில் எங்களது உரிமைகளை வலியுறுத்தி எங்களுக்கு சட்ட ரீதியில் சமூகப் பாதுகாப்பினை வழங்குமாறு தான் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். இது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எங்களை சமூகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தும் ஒரு விடயமாகவே இதனை கருதுகின்றோம்.

எனது 21 வயதில் நான் ஒரு பெண் என்பதனை முதன் முதலாக உணர்ந்தேன். அந்த உணர்வினையும் புதுவித மாற்றத்தினையும் எதிர்கொள்ள முடியாமல ;  தவித்தேன். நான் பெண்ணாக மாற முயன்ற போதெல்லாம் என் தாயாரின்  மிக மோசமான தாக்குதலுக்குள்ளானேன்” -பூமி

எங்களை பாரபட்சப்படுத்தும் சட்டத்தினை  திருத்துங்கள் அல்லது நீக்கி விடுங்கள்

குற்றவியல் கோவையின் பிரிவுகள் 365அ மற்றும் 399  என்பனவற்றை LGBT சமுதாயத்தினை இலக்கு வைப்பதற்கும், தொல்லை கொடுப்பதற்குமான கருவியாகவே நாங்கள் காண்கின்றோம்.  அதனால் இந்த சட்டத்தினை நீக்க வேண்டும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும். 365 அ சட்டத்தின் பிரகாரம் “இயற்கைக்கு மாறான பாலுறவு கொள்ளும் போது” பிடிபட்டால் கைது செய்ய முடியும்.  ஆனால் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஆண் சமபாலுறவினர் பெரும் பிரச்சினைகளையும், பாலியல் ரீதியிலான அத்துமீறல்களையும், எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் பல மோசமான துஷ்பிரயோகத்தினை அவர்கள் எதிர்கொள்கின்றனர். மேலும் 399 சட்டப் பிரிவின் பிரகாரம் ‘ஆள்மாறாட்டத்தினால் ஏமாற்றப்படல்” என்ற விடயத்தின் அடிப்படையில் திருநங்கைகள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். திருநங்கைகள் ஆள்மாறாட்டம் செய்து குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று காரணம் காட்டி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அவர்களை நடனமாட சொல்லி துன்புறுத்துதல், பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட செய்யுமாறு கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்தல் மற்றும் அவர்களின் உடமைகளான தொலைபேசி, பணம் போன்றவற்றை அபகரித்து கொள்கின்றனர். இதனால் பெரும் மனவேதனைக்குள்ளான நிலையில் சுதந்திரம் அற்ற நிலையில் நாங்கள் வாழ வேண்டியுள்ளது.

எங்கள் குடும்பத்தினர் குறி வைக்கப்படுதலும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்களுக்கும் முடிவு வேண்டும்

LGBTயினர் எதிர்கொள்ளும் மிகவும் முக்கியமான பிரச்சினைகளில் அவர்கள் சார்ந்திருக்கும் குடும்ப உறவினர்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள் பிரச்சினைகள் என்பன முக்கிய இடத்தினை வகிக்கின்றன. எங்களை அங்கீகரிக்கவும், ஏற்றுக் கொள்ளவும் குடும்பத்தினர்  தயங்குகின்றனர். இதற்கு காரணம் சமூகத்தினால் அவமானப்படுத்தப்படுவோம் என்ற அச்சநிலையாகும். குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிய நிலையிலும், குடும்பத்தினர் அவமானத்திற்குள்ளாக நேரிடும் என்ற அச்ச நிலையிலும் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஆனாலும் சிலருக்கு குடும்பத்தினரின் ஆதரவும், அனுதாபமும் கிடைக்கின்றது. அவ்வாறானவர்கள் அதிஷ்டம் வாய்ந்தவர்கள் தான். தன் குடும்பத்தில் இவ்வாறான மாற்றுப் பாலின உறுப்பினர்கள் இருப்பதனை எவரும் விரும்புவதில்லை. இதனால் பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்குகின்றனர். திருநங்கையாயின் பெண் போன்று ஆடைகளை அணிவதனையும், பெண்களைப் போன்று நடப்பதனையும் அவர்கள் தடுக்கின்றனர். இதனால் கடும் மன  அழுத்தத்தினை எதிர்கொள்ள நேரிடுகின்றது. ஆண்  சமபாலுறவாளர்களையும், பெண் சமபாலுறவாளர்களையும் அவர்களை உணர்வுகளை மதிக்காமல்  திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கின்றனர்.

17 வயது  முதல் என்னுள்  ஏற்பட்ட மாற்றத்தினால்  பாலியல்பில் வேறுபாடுகளை உணர்ந்த நான் இது பற்றி டயறியில் குறிப்புகளை தொடர்ச்சியாக  எழுதி வைத்திருந்தேன். அதனை என் தாயார் படிக்க நேர்ந்த நிலையில் என்னை நான் மாற்றிக் கொள்ளாத பட்சத்தில் எனது பெற்றோர்களினால் வீட்டை விட்டு விரட்டப்படுவேன் என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டேன். கடும் மன அழுத்தத்தில் இருந்த நான் தற்கொலை செய்வதற்காக என் தலையணைக்கு கீழே கூரான கத்தி ஒன்றினை எப்பொழுதும் வைத்திருந்தேன்” -ஜேக்

எங்களின் அடிப்படை உரிமைகள் சமூகத்தில்  தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றது

ஆண் சமபாலுறவாளர்கள் காப்புறுதியை வைத்திருக்க முடியாது. இரத்த தானம் செய்ய முடியாது. வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள தன் ஆண் துணையைப் பார்க்க அனுமதி கிடைக்காது. ஏனெனில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கே அந்த சலுகை கிடைக்கின்றது. 20, 30 வருடங்கள் தொடர்பில் இருந்த சம பாலுறவாளருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. அத்துடன்  சொத்துக்களை தனது துணையாக உள்ள சம பாலுறவாளருக்கு சட்டபூர்வமாக வழங்கவும் முடியாது. இவை அனைத்தும் அடிப்படை உரிமைகள் மறுப்பாகவே நாங்கள் காண்கின்றோம். திருநங்கைகள் எப்பொழுதும் தங்கள் அடையாளத்தினை நிரூபிக்கும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடின் 399வது பிரிவு சட்டத்தின்படி அவர்கள் ஆள்மாறாட்டத்திற்காக கைது செய்யப்படுவர். வெள்ளிக்கிழமைகளில் இந்த கைதுகள் அதிகம் நிகழும். ஏனெனில் வார இறுதி நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த முடியாது காரணம் காட்டி அவர்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்.

எங்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்காதீர்கள். நாங்களும் உங்களைப் போன்று சாதாரண சக மனிதர்களே

காம வெறிப் பிடித்தவர்கள், பாலியல் நோக்கத்தினை எப்பொழுதும் கொண்டிருப்பவர்கள், சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள், நேரம் காலம் பாராது எந்த இடத்திலும் பாலுறவு கொள்பவர்கள், HIV பரப்புபவர்கள் என்ற தவறான கண்ணோட்டங்கள் ஆண் சம பாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகள் என்போர் மீது காணப்படுகின்றன. சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள ஒரு சிலர் செய்யும் இவ்வாறான செயல்களை வைத்து எங்களை அவ்வாறு எடை போடுவது தவறு.   ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சாதாரண ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தாதா? அவர்கள் குற்றம் செய்யாதவர்களா?  ஏன் இவ்வாறு எங்களை மட்டும் குறி வைத்து தாக்க வேண்டும் என்பதே எங்கள் ஆதங்கம். இவ்வாறான கண்ணோட்டத்தினை சமூகத்தில் ஏற்படுத்துவதில் ஊடகங்களும் முக்கிய வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றன. பெரும் குற்றமிழைத்தவர்களாகவே சமூகம் எங்களை பார்க்கின்றது. முற்றிலும் புறம்பான ஓர் அடையாளத்தினை எங்கள் மீது திணிக்கின்றது. இந்த அடையாளம் தான் எங்கள் பிரச்சினை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்களால் வெளிப்படையாக பணியாற்ற முடியாத நிலையே காணப்படுகின்றது. சட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் தான் சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்படும். அதற்காகவே நாங்கள் தொடர்ச்சியாக போராடுகின்றோம்.

 

Social Share: